Asia Cup 2025: India vs Pakistan: இந்தியா, பாகிஸ்தான் சூப்பர் 4 சுற்று போட்டி முன்னதாக பாகிஸ்தான் வீரர் ஃபக்கர் ஜமான் இந்திய ரசிகர்களுக்கு ஆட்டோகிராஃப் போட்டு கொடுத்தார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்று போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்தியா, பாகிஸ்தான் போட்டி என்றாலே சர்ச்சைகளுக்கும் பரபரப்புக்கும் பஞ்சம் இருக்காது.
இந்தியா-பாகிஸ்தான் மோதல்
ஏற்கெனவே லீக் ஆட்டத்தில் இரு அணிகளும் மோதியபோது, பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் எல்லையில் மோதல் ஆகியவற்றை மனதில் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் அணியிடம் கைகுலுக்கவில்லை. இந்த சர்ச்சை உலகம் முழுவதும் பேசுபொருளான நிலையில், இன்றைய போட்டி தொடங்குவதற்கு முன்பு இந்திய ஜெர்சி அணிந்திருந்த ரசிகர்களுக்கு பாகிஸ்தான் வீரர் ஃபக்கர் ஜமான் ஆட்டோகிராஃப் போடும் காட்சி வெளியாகி உள்ளது.
இந்திய ரசிகர்களுக்கு ஆட்டோகிராஃ போட்ட ஃபக்கர் ஜமான்
அதாவது போட்டிக்கு முன்னதான பயிற்சி அமர்வுக்குப் பிறகு ஃபக்கர் ஜமான் இந்திய ரசிகர்களுக்கு ஆட்டோகிராஃப் கொடுக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலானது. கைகுலுக்கல் சர்ச்சை இருந்தபோதிலும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களிடம் ஆட்டோகிராஃப் வாங்க இந்திய ரசிகர்கள் காத்திருந்தனர். இதனால் ஃபக்கர் ஜமான் ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றினார். அவர்களுக்கு ஆட்டோகிராஃப் போட்டு கொடுத்தார்.
இன்றைய போட்டியிலும் கைகுலுக்கவில்லை
இன்றைய சூப்பர் 4 மோதலுக்கு முன்னதாக, பாகிஸ்தான் செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்தது. மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய (பிசிபி) தலைவர் மொஹ்சின் நக்வி, பயிற்சி அமர்வின் போது வீரர்களைச் சந்தித்து, பாகிஸ்தான் பயிற்சியாளர் மைக் ஹெசன் மற்றும் கேப்டன் சல்மான் அலி ஆகா ஆகியோருடன் பேசினார்.இதேபோல் இன்றைய போட்டிக்கும் முன்னதாக டாஸ் போடும்போது இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகாவிடம் கைகுலுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
