Asianet News TamilAsianet News Tamil

எவின் லூயிஸின் ஆல்டைம் டி20 லெவனில் 5 இந்திய வீரர்கள்..! தல தோனி தான் கேப்டன்

டி20 கிரிக்கெட்டின் ஆல்டைம் சிறந்த லெவனை வெஸ்ட் இண்டீஸின் அதிரடி டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் எவின் லூயிஸ் தேர்வு செய்துள்ளார்.
 

evin lewis picks his all time t20 best eleven
Author
Dubai - United Arab Emirates, First Published Oct 29, 2021, 4:41 PM IST

டி20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவரும் இந்த வேளையில், வெஸ்ட் இண்டீஸின் அதிரடி டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் எவின் லூயிஸ், டி20 கிரிக்கெட்டின் ஆல்டைம் சிறந்த லெவனை தேர்வு செய்துள்ளார்.

டி20 கிரிக்கெட்டின் ஆல்டைம் சிறந்த அணியின் தொடக்க வீரர்களாக யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெய்ல் மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார் லூயிஸ். கிறிஸ் கெய்ல் சர்வதேச டி20 போட்டிகளில் மட்டுமல்லாது, ஐபிஎல், கரீபியன் பிரீமியர் லீக், கனடா பிரீமியர் லீக் என உலகின் பல்வேறு டி20 லீக் தொடர்களிலும் ஆடி 1000 சிக்ஸர்களுக்கு மேல் விளாசியுள்ளார்.

ரோஹித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 112 போட்டிகளில் ஆடி 2864 ரன்களை குவித்து, அதிக ரன்களை குவித்த வீரர்கள் பட்டியலில் 3ம் இடத்தில் உள்ளார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 4 சதங்கள் மற்றும் 133 சிக்ஸர்களை விளாசியுள்ள ரோஹித் சர்மா, ஐபிஎல்லில் 5 முறை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தவர்.

evin lewis picks his all time t20 best eleven

3ம் வரிசையில் விராட் கோலியை தவிர வேறு வீரரை நினைத்துக்கூட பார்க்க முடியாது. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த வீரர் கோலி தான். 91 போட்டிகளில் ஆடி 3216 ரன்களை குவித்துள்ளார் கோலி.

4ம் வரிசையில் தென்னாப்பிரிக்க அதிரடி மன்னன் டிவில்லியர்ஸையும், 5ம் வரிசையில் வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் கைரன் பொல்லார்டையும் தேர்வு செய்துள்ளார் எவின் லூயிஸ். கைரன் பொல்லார்டும் கெய்ல் மாதிரிதான். ஐபிஎல் உட்பட உலகின் முன்னணி டி20 லீக் தொடர்கள் அனைத்திலும் ஆடி டி20 கிரிக்கெட்டில் அபரிமிதமான அனுபவத்தை கொண்டவர்.

விக்கெட் கீப்பராக தோனியை தேர்வு செய்துள்ள எவின் லூயிஸ், அவரைத்தான் கேப்டனாகவும் தேர்வு செய்துள்ளார். டி20 உலக கோப்பை அறிமுகப்படுத்தப்பட்ட 2007ல் முதல் டி20 உலக கோப்பையை வென்ற கேப்டன் தோனி தான். களவியூகங்கள், வீரர்களிடமிருந்து சிறந்த ஆட்டத்தை வெளிக்கொணர்தல் ஆகிய கேப்டன்சி விஷயங்களில் தோனிக்கு நிகர் தோனியே என்ற வகையில், தோனியை கேப்டனாக தேர்வு செய்துள்ளார் லூயிஸ்.

evin lewis picks his all time t20 best eleven

தோனியே ஃபினிஷர் தான் என்றாலும், அதிரடி ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரசலையும் அணியில் தேர்வு செய்துள்ள லூயிஸ், ஸ்பின்னர்களாக ஜடேஜா மற்றும் ரஷீத் கான் ஆகிய இருவரையும், ஃபாஸ்ட் பவுலர்களாக பும்ரா மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார்.

எவின் லூயிஸ் தேர்வு செய்த ஆல்டைம் டி20 லெவன்:

கிறிஸ் கெய்ல், ரோஹித் சர்மா, விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ், கைரன் பொல்லார்டு, தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரே ரசல், ரவீந்திர ஜடேஜா, ரஷீத் கான், ஜஸ்ப்ரித் பும்ரா, மிட்செல் ஸ்டார்க்.

எவின் லூயிஸின் ஆல்டைம் டி20 லெவனில் 5 வீரர்கள் இந்தியர்கள். ரோஹித் சர்மா, விராட் கோலி, எம்.எஸ்.தோனி, ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரித் பும்ரா ஆகிய 5 இந்திய வீரர்களை தேர்வு செய்துள்ளார் எவின் லூயிஸ். கெய்ல், பொல்லார்டு, ரசல் ஆகிய 3 வெஸ்ட் இண்டீஸ் வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios