வெஸ்ட் இண்டீஸ் அணி கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பையில் படுமோசமாக தோற்று வெளியேறியதை அடுத்து, ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கு பொல்லார்டை கேப்டனாக நியமித்து, அவரது தலைமையில் அணியை மறுகட்டமைத்து வருகிறது. 

இந்நிலையில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் அதிரடி வீரர்களான எவின் லூயிஸ் மற்றும் ஷிம்ரான் ஹெட்மயர் ஆகிய இருவரும் ஃபிட்னெஸ் இல்லை என்பதற்காக அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். இருவருமே அதிரடி பேட்ஸ்மேன்கள். இந்தியாவுக்கு எதிரான தொடரில் கூட அண்மையில் லூயிஸும் ஹெட்மயரும் தான் அடித்து ஆடி ஸ்கோர் செய்தனர். அயர்லாந்துக்கு எதிரான தொடரில் லூயிஸ் சிறப்பாக ஆடினார். ஆனால் ஹெட்மயர் சரியாக ஆடவில்லை. 

இந்நிலையில், ஃபிட்னெஸ் டெஸ்ட்டில் ஒரு சோதனையில் கூட இருவரும் தேறவில்லை என்பதற்காக அவர்கள் இருவரையுமே அதிரடியாக நீக்கியுள்ளது வெஸ்ட் இண்டீஸ் அணி. பென்ச் பலமே அதிகமாக இருக்கும் அணி, உடற்தகுதி விவகாரத்தில் கெடுபிடி காட்டலாம். ஆனால் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வீரர்களை குறைவாக பெற்றிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி, அதிலும் சிலரை இப்படி நீக்குவது சரியான செயலாக இருக்காது என்று வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. 

லூயிஸ் மற்றும் ஹெட்மயருக்கு பதிலாக டேரன் பிரேவோ மற்றும் ரோவ்மன் ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கைக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. 

வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் அணி:

பொல்லார்டு(கேப்டன்), ஷாய் ஹோப்(விக்கெட் கீப்பர்), ஃபேபியன் ஆலன், சுனில் ஆம்ப்ரிஸ், டேரன் பிராவோ, ரோஸ்டான் சேஸ், ஷெல்டான் கோட்ரெல், ஜேசன் ஹோல்டர், அல்ஸாரி ஜோசஃப், பிரண்டன் கிங், கீமோ பால், நிகோலஸ் பூரான், ரோவ்மன் பவல், ரொமாரியோ ஷெஃபெர்டு, ஹைடன் வால்ஷ்.