உலக கோப்பை வரும் 30ம் தேதி தொடங்க உள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி மற்றும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஆகிய இரண்டில் ஒரு அணிதான் உலக கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கடந்த சில ஆண்டுகளாக அந்த அணி ஒருநாள் போட்டிகளில் ஆக்ரோஷமாக ஆடி வெற்றிகளை குவித்துவருவதோடு, உலக கோப்பை இங்கிலாந்தில் நடப்பது அந்த அணிக்கு கூடுதல் பலம். உலக கோப்பை 3ம் தேதி தொடங்க உள்ள நிலையில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணி ஆடிவருகிறது. 

5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டி முடிவில்லாமல் முடிந்தது. இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. மூன்றாவது போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 358 ரன்களை குவித்தது. 359 ரன்கள் என்ற இலக்கை 45வது ஓவரிலேயே எட்டி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்று 2-0 என முன்னிலை வகிக்கிறது. 

இந்த போட்டியில் பந்துவீச இங்கிலாந்து அணி அதிகமாக நேரம் எடுத்துக்கொண்டது. கடந்த பிப்ரவரி மாதம் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒரு போட்டியில் இங்கிலாந்து அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டது. அந்த சம்பவம் நடந்து ஓராண்டிற்குள்ளாக மீண்டும் பந்துவீச அதிகநேரம் எடுத்துக்கொண்டதால், இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கனுக்கு ஒரு போட்டியில் ஆட ஐசிசி தடை விதித்துள்ளது. மேலும் இயன் மோர்கனுக்கு போட்டி ஊதியத்தில் 40 சதவிகிதமும் மற்ற இங்கிலாந்து வீரர்களுக்கு 20 சதவிகிதமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

அதனால் பாகிஸ்தானுக்கு எதிரான நான்காவது போட்டியில் இயன் மோர்கன் ஆடமாட்டார்.