உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்றைய போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. 

இங்கிலாந்து அணி முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் அணி முதல் போட்டியிலேயே வெஸ்ட் இண்டீஸிடம் மரண அடி வாங்கியது. அதுமட்டுமல்லாமல் உலக கோப்பை தொடங்குவதற்கு முன்னதாக இங்கிலாந்துக்கு எதிராக நடந்த ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் ஆனது. 

தொடர்ச்சியாக 10 போட்டிகளுக்கும் மேலாக தொடர் தோல்விகளை சந்தித்துள்ள பாகிஸ்தான் அணிக்கு ஒரு வெற்றி அவசியம். எனவே இங்கிலாந்து அணியை வீழ்த்தும் முனைப்பில் களமிறங்கியுள்ளது. ஆனால் அது அவ்வளவு எளிதான காரியமல்ல. 

இந்த போட்டியில் இங்கிலாந்து அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிளெங்கட்டிற்கு பதிலாக மார்க் உட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் அணியில் கடந்த போட்டியில் ஆடாத அனுபவ வீரர் ஷோயப் மாலிக்கிற்கு இந்த போட்டியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஹாரிஸ் சோஹைலுக்கு பதிலாக மாலிக் சேர்க்கப்பட்டுள்ளார். 20 ஆண்டுகால அனுபவம் கொண்டவர் மாலிக். மிடில் ஆர்டரில் அவர் வலுசேர்ப்பார். அதேபோல இமாத் வாசிமிற்கு பதிலாக ஆசிஃப் அலி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

நாட்டிங்காமில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன், பாகிஸ்தான் அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். 

இங்கிலாந்து அணி:

ராய், பேர்ஸ்டோ, ரூட், இயன் மோர்கன்(கேப்டன்), பட்லர், ஸ்டோக்ஸ், மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷீத், ஆர்ச்சர், மார்க் உட்.

பாகிஸ்தான் அணி:

ஃபகார் ஜமான், இமாம் உல் ஹக், பாபர் அசாம், முகமது ஹஃபீஸ், சர்ஃபராஸ் அகமது(கேப்டன்), ஷோயப் மாலிக், ஆசிஃப் அலி, ஹசன் அலி, ஷதாப் கான், வஹாப் ரியாஸ், முகமது அமீர்.