இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து ஆடிவருகிறது. 

கொரோனா அச்சுறுத்தலால் கடந்த 4 மாதங்களாக எந்தவிதமான கிரிக்கெட் போட்டியும் நடக்கவில்லை. 4 மாதங்களுக்கு பிறகு மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கியுள்ளன. வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. 

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சவுத்தாம்ப்டனில் இன்று தொடங்கியது. இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கே தொடங்கியிருக்க வேண்டிய போட்டி, மழையால், மதிய உணவு இடைவேளைக்கு பிறகு தொடங்கியது. 

ஸ்டேடியத்தில் பார்வையாளர்களே இல்லாமல் இந்த போட்டி நடத்தப்படுகிறது. இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் ஜோ ரூட், சொந்த காரணங்களுக்காக இந்த போட்டியில் ஆடவில்லை. அதனால் பென் ஸ்டோக்ஸ் இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டனாக இருந்து வழிநடத்துகிறார். 

4 மாதங்களுக்கு பிறகு நடக்கும் கிரிக்கெட் போட்டி, ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ரோரி பர்ன்ஸ் மற்றும் டோமினிக் சிப்ளி ஆகிய இருவரும் களமிறங்கினர். கேப்ரியலின் பவுலிங்கில் இரண்டாவது ஓவரிலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார் சிப்ளி. இதையடுத்து பர்ன்ஸுடன் ஜோ டென்லி ஜோடி சேர்ந்திருக்கிறார். 

இங்கிலாந்து அணி:

ரோரி பர்ன்ஸ், டோமினிக் சிப்ளி, ஜோ டென்லி, ஜாக் க்ராவ்லி, பென் ஸ்டோக்ஸ்(கேப்டன்), ஓலி போப், ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), டோமினிக் பெஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், மார்க் உட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.
 
வெஸ்ட் இண்டீஸ் அணி:

ஜான் கேம்ப்பெல், க்ரைக் பிராத்வெயிட், ஷமார் ப்ரூக்ஸ், ஷேய் ஹோப், ரோஸ்டான் சேஸ், ஜெர்மைன் பிளாக்வுட், ஷேன் டௌரிச்(விக்கெட் கீப்பர்), ஜேசன் ஹோல்டர்(கேப்டன்), அல்ஸாரி ஜோசஃப், கீமார் ரோச், ஷெனான் கேப்ரியல்.