Asianet News TamilAsianet News Tamil

உலக கோப்பை வரலாற்றின் பெஸ்ட் ஃபைனல்.. வித்தியாசமாக முடிந்த இறுதிப்போட்டி.. முதன்முறையாக கோப்பையை வென்ற இங்கிலாந்து

உலக கோப்பை இறுதி போட்டி செம த்ரில்லான போட்டியாக அமைந்தது. கடைசி பந்தில் போட்டி டிரா ஆனதை அடுத்து சூப்பர் ஓவரில் இங்கிலாந்து அணி 15 ரன்கள் அடிக்க, 16 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணியும் 15 ரன்கள் அடிக்க சூப்பர் ஓவரும் டிராவில் முடிந்தது.
 

england win world cup in first time
Author
England, First Published Jul 15, 2019, 12:13 AM IST

உலக கோப்பை இறுதி போட்டி செம த்ரில்லான போட்டியாக அமைந்தது. கடைசி பந்தில் போட்டி டிரா ஆனதை அடுத்து சூப்பர் ஓவரில் இங்கிலாந்து அணி 15 ரன்கள் அடிக்க, 16 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணியும் 15 ரன்கள் அடிக்க சூப்பர் ஓவரும் டிராவில் முடிந்தது.

உலக கோப்பை இறுதி போட்டியில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. லண்டன் லார்ட்ஸில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் மார்டின் கப்டில் அதிரடியாக தொடங்கினார். இதுவரை இந்த உலக கோப்பையில் நல்ல ஸ்டார்ட் கிடைக்காமல் திணறிவந்த கப்டிலுக்கு இந்த போட்டியில் நல்ல ஸ்டார்ட் கிடைத்தது. ஆனால் அதை பெரிய இன்னிங்ஸாக மாற்றாமல் 18 பந்துகளில் 19 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் நிகோல்ஸுடன் கேப்டன் கேன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடி பார்ட்னர்ஷிப் அமைத்தது. வில்லியம்சனும் சுமார் 9 ஓவர்கள் பேட்டிங் ஆடி  30 ரன்கள் அடித்த நிலையில், களத்தில் நிலைத்த பிறகு ஆட்டமிழந்து ஏமாற்றினார். அரைசதம் அடித்த நிகோல்ஸ் 55 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் பொறுப்பை தனது தோள்களில் சுமக்க வேண்டிய அனுபவ வீரர் ரோஸ் டெய்லர் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் லேதம் ஒருமுனையில் நிற்க, மறுமுனையில் நம்பிக்கையளிக்கும்படி அடித்து ஆடிய ஜேம்ஸ் நீஷமும் 19 ரன்களில் ஆட்டமிழந்தார்.

டி கிராண்ட் ஹோம் களமிறங்கியது முதலே சரியாக ஷாட் ஆடமுடியாமல் திணறினார். ஜோஃப்ரா ஆர்ச்சரின் சில பவுன்ஸர்களில் உடலில் அடியும் வாங்கினார். தட்டுத்தடுமாறி 28 பந்துகளில் 16 ரன்களில் அவர் ஆட்டமிழக்க, லேதமும் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி 10 ஓவர்களில் இங்கிலாந்து பவுலர்கள் நல்ல வேரியேஷனில் பந்துவீசி நியூசிலாந்து பேட்ஸ்மேன்களை பெரிய ஷாட் ஆடவிடாமல் ரன்களை கட்டுப்படுத்தினர். இதையடுத்து 50 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 241 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

242 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் அதிரடி தொடக்க வீரர் ஜேசன் ராய், போல்ட் வீசிய முதல் பந்திலேயே அவுட்டாகியிருக்க வேண்டியவர். எல்பிடபிள்யூ அப்பீலுக்கு அம்பயர் அவுட் கொடுக்காததால் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் ரிவியூ எடுத்தார். அரை பந்து மட்டுமே ஸ்டம்பில் பட்டதால் அம்பயர் கால் என்பதால் அது அவுட்டில்லாமல் போனது. அதன்பின்னர் சில பவுண்டரிகளை அடித்து மிரட்டிய ராயை 17 ரன்களில் ஹென்ரி வீழ்த்தினார். அதன்பின்னர் களமிறங்கியது முதலே திணறிய ரூட்டும் மோர்கனும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். அதன்பின்னர் நன்றாக ஆடிக்கொண்டிருந்த பேர்ஸ்டோவின் விக்கெட்டை வீழ்த்தி ஃபெர்குசன் பிரேக் கொடுத்தார்.

இங்கிலாந்து அணி 86 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. அதன்பின்னர் ஸ்டோக்ஸும் பட்லரும் ஜோடி சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினர். ஃபெர்குசன், போல்ட், சாண்ட்னெர், டி கிராண்ட் ஹோம், நீஷம் என அனைவரின் பவுலிங்கையும் சிறப்பாக ஆடி இருவருமே அரைசதம் அடித்தனர். ஆனால் பட்லர் அவசரப்பட்டு  59 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் கிறிஸ் வோக்ஸ், பிளங்கெட், ஆர்ச்சர் ஆகியோர் ஆட்டமிழக்க, போட்டி முழுக்க முழுக்க நியூசிலாந்து கட்டுப்பாட்டில் வந்தது. 49வது ஓவரின் 5வது பந்தில் ஸ்டோக்ஸ் தூக்கியடித்த பந்தை பவுண்டரி லைனில் கேட்ச் பிடித்த போல்ட் பவுண்டரி லைனை மிதித்ததால் அதிர்ஷ்டவசமாக சிக்ஸர் கிடைத்தது. கடைசி ஓவரில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரின் முதல் 2 பந்துகளை அபாரமாக வீசி ரன்னே கொடுக்காமல் கட்டுப்படுத்தினார் போல்ட். மூன்றாவது பந்தில் ஸ்டோக்ஸ் சிக்ஸர் விளாசினார். கடைசி மூன்று பந்தில் 9 ரன்கள் தேவைப்பட்டது. அந்த பந்தில் ஸ்டோக்ஸ் 2 ரன்கள் அடித்தார். இரண்டாவது ரன் ஓடி முடிக்கும்போது கப்டில் விட்ட த்ரோவில் பந்து நேராக வந்து ஸ்டோக்ஸின் பேட்டில் பட்டு பவுண்டரிக்கு சென்றது.

ஸ்டோக்ஸ் வேண்டுமென்றே பந்தை தடுக்காத காரணத்தால் அவர்கள் ஓடிய 2 ரன்கள் உட்பட அந்த பவுண்டரியையும் சேர்த்து 6 ரன்கள் வழங்கப்பட்டது. கடைசி 2 பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டது. ஐந்தாவது பந்தில் இரண்டாவது ரன் ஓடும்போது அடில் ரஷீத் அவுட்டானார். இதையடுத்து கடைசி பந்தில் 2 ரன் தேவைப்பட்ட நிலையில், அந்த பந்தை ஸ்டோக்ஸ் தட்டிவிட்டு இரண்டு ரன் ஓடமுயன்றார். அதிலும் இரண்டாவது ரன் ஓடும்போது மார்க் உட் அவுட்டானார்.  இதையடுத்து இங்கிலாந்து அணியும் 241 ரன்கள் அடித்ததால் போட்டி டிரா ஆனது. 

இதையடுத்து சூப்பர் ஓவர் போடப்பட்டது. ஐசிசி விதிப்படி இரண்டாவதாக பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடியது. ஸ்டோக்ஸும் பட்லரும் இறங்கினர். அந்த ஓவரை போல்ட் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் 3 ரன்களும் இரண்டாவது பந்தில் ஒரு ரன்னும் எடுக்கப்பட்டது. மூன்றாவது பந்தில் ஸ்டோக்ஸ் அபாரமாக ஒரு பவுண்டரி அடித்தார். நான்காவது பந்தில் ஸ்டோக்ஸ் ஒரு ரன் எடுக்க, ஐந்தாவது பந்தில் பட்லர் இரண்டு ரன் அடித்தார். கடைசி பந்தில் பட்லர் பவுண்டரியுடன் முடிக்க, இங்கிலாந்து அணி சூப்பர் ஓவரில் 15 ரன்கள் அடித்தது. 

சூப்பர் ஓவரில் 16 ரன்கள் என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி சார்பில் கப்டில் மற்றும் நீஷம் ஆகிய இருவரும் களமிறங்கினர். அந்த ஓவரை ஆர்ச்சர் வீசினார். முதல் பந்தை ஆர்ச்சர் வைடாக போட்டார். அதன்பின்னர் போடப்பட்ட முதல் பந்தில் நீஷம் 2 ரன்கள் அடித்தார். இரண்டாவது பந்தில் நீஷம் மிட் விக்கெட் திசையில் அபாரமான சிக்ஸர் ஒன்றை அடித்தார். மூன்றாவது பந்தில் நீஷம் மீண்டும் 2 ரன்கள் அடித்தார். மூன்றாவது பந்தில் 2 ரன்களும் நான்காவது பந்தில் 2 ரன்களும் அடித்த நீஷம், ஐந்தாவது பந்தில் ஒரு ரன் அடித்தார். கடைசி பந்தில் நியூசிலாந்தின் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கப்டில் இரண்டாவது ரன் ஓடும்போது ரன் அவுட்டானதால் சூப்பர் ஓவரும் டிராவில் முடிந்தது. 

சூப்பர் ஓவரும் டிராவில் முடிந்ததால்  இறுதி போட்டியில் அதிக பவுண்டரிகள் அடித்த அணி என்ற வகையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. உலக கோப்பை வரலாற்றில் இந்த மாதிரி முடிந்த முதல் போட்டி இதுதான். இதையடுத்து உலக கோப்பை வரலாற்றில் இங்கிலாந்து அணி முதன்முறையாக கோப்பையை வென்றது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios