பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்து ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி வென்றுள்ளது. 

இங்கிலாந்து பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடந்தது. இதில் முதல் போட்டி முடிவில்லாமல் முடிந்த நிலையில், அடுத்த 3 போட்டிகளிலும் வென்று தொடரை வென்றது இங்கிலாந்து அணி. கடைசி போட்டி நேற்று நடந்தது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜானி பேர்ஸ்டோ மற்றும் ஜேம்ஸ் வின்ஸ் ஆகிய இருவரும் அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். ஆனால் இவருமே பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. இவர்கள் இருவரின் விக்கெட்டுக்கு பிறகு கேப்டன் இயன் மோர்கனும் ஜோ ரூட்டும் இணைந்து சிறப்பாக ஆடி ரன்களை குவித்தனர். மோர்கன் 76 ரன்களிலும் ரூட் 84 ரன்களிலும் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டனர். 

ஜோஸ் பட்லர் தன் பங்கிற்கு 34 ரன்களை மட்டுமே சேர்த்தார். பட்லர் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை ஆடவில்லை. 34 பந்துகளில் 34 ரன்கள் மட்டுமே எடுத்தார். பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ் என யாருமே சிறப்பாக ஆடவில்லை. கடைசி நேரத்தில் டாம் கரனின் அதிரடியால் இங்கிலாந்து அணியின் ரன் உயர்ந்தது. டாம் கரன் 15 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 351 ரன்களை குவித்தது. 

352 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஃபகார் ஜமானை முதல் ஓவரிலேயே டக் அவுட்டாக்கி அனுப்பினார் வோக்ஸ். அதன்பின்னர் அபித் அலி, முகமது ஹஃபீஸ் ஆகிய இருவரும் வோக்ஸ் வீசிய 3வது ஓவரில் ஆட்டமிழந்தனர். முதல் 3 விக்கெட்டுகளை விரைவிலேயே வீழ்த்தி இங்கிலாந்து அணிக்கு நம்பிக்கையளித்தார் வோக்ஸ். சர்ஃபராஸும் பாபர் அசாமும் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினர். 

நன்றாக ஆடிக்கொண்டிருந்த பாபர் அசாம் 80 ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேறினார். அதன்பின்னர் களமிறங்கிய ஷோயப் மாலிக் சோபிக்கவில்லை. மாலிக் 4 ரன்களில் வெளியேறினார். சிறப்பாக ஆடிய கேப்டன் சர்ஃபராஸ் அகமது சதத்தை நெருங்கிய போது 97 ரன்களில் அவசரப்பட்டு ரன் அவுட்டாகி சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். 

பாகிஸ்தானின் ஸ்கோர் 32 ஓவருக்கு 193 ரன்கள் இருந்த நிலையில் சர்ஃபராஸ் அவுட்டானார். அதன்பின்னர் அந்த அணியின் வீரர்களால இலக்கை எட்டமுடியவில்லை. சீரான இடைவெளியில் பாகிஸ்தான் அணி விக்கெட்டுகளை இழந்தது. வோக்ஸ் மற்றும் அடில் ரஷீத் பின்வரிசை வீரர்களை சரித்துவிட்டனர். அதனால் பாகிஸ்தான் அணி 47வது ஓவரில் 297 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து 54 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து அணி 4-0 என பாகிஸ்தான் அணியை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது. இந்த போட்டியில் 5விக்கெட்டுகளை வீழ்த்திய கிறிஸ் வோக்ஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.