உலக கோப்பை தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளாக பார்க்கப்படும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று நடக்கிறது. 

இந்த உலக கோப்பையை அபாரமாக தொடங்கிய இங்கிலாந்து அணி, இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்து தோல்வியை தழுவியதால், எஞ்சிய 2 போட்டிகளில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளை கண்டிப்பாக வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதற்கிடையே உலக கோப்பையை மோசமாக தொடங்கிய பாகிஸ்தான் அணி, தொடர்ச்சியாக 3 வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் நான்காமிடத்திற்கு முன்னேறியது. இங்கிலாந்து அணி புள்ளி பட்டியலில் ஐந்தாமிடத்தில் உள்ளது. 

இங்கிலாந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து எதிரணிகளை தெறிக்கவிட்டு அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்து கொண்டிருந்த ஜேசன் ராய், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் காயத்தால் விலகினார். அதன்பின்னர் தான் இங்கிலாந்து அணி படுமோசமாக சொதப்பி தொடர் தோல்விகளை அடைந்தது. 

ராய்க்கு பதிலாக தொடக்க வீரராக களமிறங்கிய வின்ஸ் ஒரு போட்டியில் கூட சரியாக ஆடவில்லை. எனவே இந்தியாவுக்கு எதிராக ராய் ஆட வேண்டிய அவசியம் இருப்பதால், காயம் முழுவதுமாக குணமடைந்து முழு உடற்தகுதியை ராய் பெறும் முன்னரே அவரை பயிற்சியில் ஈடுபட வைத்துள்ளது இங்கிலாந்து அணி. ஜேசன் ராய் வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். ஆனால் அதேநேரத்தில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர பவுலராக திகழும் இளம் ஃபாஸ்ட் பவுலர் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் கடந்த 2 நாட்களாக பயிற்சியில் ஈடுபடவில்லை. 

எனவே இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஆர்ச்சர் ஆடுவது சந்தேகம்தான். ஆர்ச்சர் ஆடுவாரா இல்லையா என்பது உறுதியாக தெரியவில்லை. ஒருவேளை ஆர்ச்சர் ஆடவில்லை என்றால், அது இந்திய அணிக்கு கூடுதல் பலமாக அமையும். 

இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன், இந்தியாவுக்கு எதிரான போட்டி முக்கியமான போட்டி என்பதால் ஜேசன் ராயை இந்தியாவுக்கு எதிராக களமிறக்க முயற்சி செய்து வருகிறோம். அவரும் பயிற்சியில் ஈடுபட்டுவருகிறார். முழு உடற்தகுதியை பெற்றுவிடுவார் என்று நம்புகிறோம் என்றார். 

மேலும் ஆர்ச்சர் குறித்து பேசும்போது, ஆர்ச்சர் 2 நாட்களாக பயிற்சி செய்யவில்லை. எனினும் அவர் ஆடுவாரா மாட்டாரா என்பது குறித்து இப்போது சொல்ல முடியாது. போட்டி தொடங்கும் முன்புதான் அதுகுறித்து முடிவு செய்யப்படும் என்றார்.