இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பாரம்பரிய டெஸ்ட் தொடரான ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 251 ரன்கள் வித்தியாசாத்தில் அபார வெற்றி பெற்றது. 

பர்மிங்காமில் நடந்த அந்த போட்டியில், இரு அணிகளுக்கும் இடையேயான பெரிய வித்தியாசமாக இருந்தது ஸ்டீவ் ஸ்மித் தான். இரண்டு இன்னிங்ஸ்களிலுமே சதமடித்து இங்கிலாந்தை தெறிக்கவிட்டார். 2 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து ஸ்மித் மட்டுமே 286 ரன்களை குவித்துவிட்டார். எனவே ஆஸ்திரேலியாவை வெல்ல வேண்டுமெனில், இங்கிலாந்து அணி ஸ்மித்தை வீழ்த்த வேண்டியது அவசியம். 

இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸில் வரும் 14ம் தேதி தொடங்குகிறது. அந்த போட்டிக்கான 12 வீரர்கள் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் மொயின் அலி இல்லை. மொயின் அலி முதல் போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே சோபிக்கவில்லை. எனவே அவர் அதிரடியாக நீக்கப்பட்டு, இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் அசத்திய ஆல்ரவுண்டர் சாம் கரன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

ஆண்டர்சன் இல்லாததால் ஃபாஸ்ட் பவுலர் ஜோஃப்ரா ஆர்ச்சரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஸ்மித்தை வீழ்த்துவதற்கு ஆர்ச்சர் அவசியம் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக் கேட்டிங் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

2வது ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி:

ஜோ ரூட்(கேப்டன்), ஜேசன் ராய், ரோரி பர்ன்ஸ், ஜோ டென்லி, பென் ஸ்டோக்ஸ்(துணை கேப்டன்), ஜோஸ் பட்லர், ஜானி பேர்ஸ்டோ(விக்கெட் கீப்பர்), சாம் கரன், கிறிஸ் வோக்ஸ், ஜாக் லீச், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஸ்டூவர்ட் பிராட்.