ஆஷஸ் தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 251 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. லார்ட்ஸில் நடந்த இரண்டாவது போட்டி டிராவில் முடிந்தது. மூன்றாவது போட்டியில் பென் ஸ்டோக்ஸின் வரலாற்று சிறப்புமிக்க இன்னிங்ஸால் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 

இன்னும் 2 போட்டிகள் எஞ்சியுள்ளது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றிருப்பதால் இரு அணிகளுக்குமே தொடரை வெல்லும் வாய்ப்பு உள்ளது. அதனால் அடுத்த 2 போட்டிகளுமே விறுவிறுப்பாக இருக்கும். 

இங்கிலாந்து அணி தொடருக்கு முன், முதல் 3 போட்டிகளுக்கான அணியைத்தான் அறிவித்திருந்தது. இந்நிலையில், கடைசி 2 போட்டிகளுக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் போட்டியிலேயே காயத்தால் வெளியேறிய ஆண்டர்சன், அடுத்த 2 போட்டிகளிலும் ஆடாத நிலையில், கடைசி 2 போட்டிகளுக்கான அணியிலும் இல்லை. அவருக்கு பதிலாக க்ரைக் ஓவர்டன் என்ற வீரர் அணியில் அறிமுகமாகிறார். 

அணியின் மூத்த வீரரும் அனுபவம் வாய்ந்த பவுலருமான ஜேம்ஸ் ஆண்டர்சன் இல்லாதது இங்கிலாந்து அணிக்கு பின்னடைவுதான் என்றாலும், ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆண்டர்சனின் இழப்பை ஈடுகட்டிவிட்டார் என்றே கூற வேண்டும். ஆர்ச்சர் அபாரமாக வீசிவருவதால் ஆண்டர்சனின் இழப்பு பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. 

ஜேசன் ராய் முதல் 3 போட்டிகளிலுமே சரியாக ஆடவில்லை என்றாலும், அவருக்கு மீண்டும் அணியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. சாம் கரன், பர்ன்ஸ், ஜோ டென்லி ஆகியோரும் அணியில் உள்ளனர்.  கடைசி 2 போட்டிக்கான அணியில் மொயின் அலிக்கு இடம் கிடைக்கவில்லை. 

கடைசி 2ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி:

ஜோ ரூட்(கேப்டன்), பென் ஸ்டோக்ஸ்(துணை கேப்டன்), ஜேசன் ராய், பர்ன்ஸ், ஜோ டென்லி, பேர்ஸ்டோ(விக்கெட் கீப்பர்), பட்லர், கிறிஸ் வோக்ஸ், சாம் கரன், ஸ்டூவர்ட் பிராட், ஜோஃப்ரா ஆர்ச்சர், க்ரைக் ஓவர்டன், ஜாக் லீச்.