ஒரேயொரு செசனில் ஆட்டத்தை தலைகீழாக திருப்பக்கூடிய திறன்வாய்ந்தவர் ரிஷப் பண்ட் என்பதால் ரிஸ்க் எடுக்க விரும்பாததால் தான், 2வது இன்னிங்ஸை டிக்ளேர் செய்வதற்கான அனைத்து வாய்ப்புகளும் இருந்தும் கூட, டிக்ளேர் செய்யவில்லை என்று இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.
இந்தியா இங்கிலாந்து இடையே சென்னையில் நடந்த முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 578 ரன்கள் அடிக்க, இந்திய அணி வெறும் 337 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் சுருண்டது. 241 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, 178 ரன்களுக்கு சுருண்டதையடுத்து, 420 ரன்கள் என்ற கடின இலக்கை கடைசி இன்னிங்ஸில் விரட்டிய இந்திய அணி, 192 ரன்கள் மட்டுமே அடித்து 227 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது
இந்திய மண்ணில் இந்திய அணியை வீழ்த்துவது மிகக்கடினம். ஆனாலும் இங்கிலாந்து அணி பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் மற்றும் வியூகம் ஆகிய அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டதால், இந்திய அணியை 227 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் வியூகங்கள் அடிப்படையில் மிகச்சிறப்பாக செயல்பட்ட இங்கிலாந்து அணி, 241 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடியபோது, கிட்டத்தட்ட 400 ரன்கள் முன்னிலை பெற்றபோது கூட, 2வது இன்னிங்ஸை டிக்ளேர் செய்யாமல் ஆல் அவுட் ஆகும்வரை பேட்டிங் ஆடிவிட்டுத்தான், 4ம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணியை பேட்டிங் ஆட அனுமதித்தது. இங்கிலாந்து அணி வெற்றிக்கு போதுமான முன்னிலையை பெற்றும் கூட, டிக்ளேர் செய்யாமல் 2வது இன்னிங்ஸை முழுமையாக ஆடியது அனைவருக்குமே வியப்பாகவும் புரியாத புதிராகவும் இருந்தது.

இந்நிலையில், போட்டிக்கு பின்னர் இதுகுறித்து பேசிய இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், நாங்கள் முன்கூட்டியே டிக்ளேர் செய்திருக்கலாம். இந்த போட்டியில் வெற்றி தோல்வி முடிவாக வேண்டும் என்று நான் உறுதியாக நினைத்தேன். 400 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்றால்தான் பவுலர்கள் சுதந்திரமாகவும் சிறப்பாகவும் நம்பிக்கையுடனும் செயல்பட முடியும். அவுட்ஃபீல்டு வேகமாக இருந்ததால்தான் நாங்கள் அதிக பவுண்டரிகள் அடித்து நல்ல இலக்கை நிர்ணயிக்க முடிந்தது. எனவே இந்திய வீரர்களுக்கும் அது சாதகமாக அமையும்.
அதிலும் ரிஷப் பண்ட் ஒரே செசனில் ஆட்டத்தை சுவாரஸ்யமாக்க வல்லவர். எனவே ரன்னை கட்டுப்படுத்த வேண்டும் என்ற அழுத்தத்தை பவுலர்களுக்கு கொடுக்க விரும்பவில்லை. பந்துவீசி ஆல் அவுட் செய்ய, 10 சான்ஸ் மட்டுமே எடுக்க வேண்டும். நல்ல இலக்கை நிர்ணயித்தால் அதை செய்யமுடியும் என்று நம்பியதாலும், அப்போதுதான் பவுலர்களால் விக்கெட் வீழ்த்துவதில் கவனம் செலுத்தமுடியும் என்பதாலும்தான், டிக்ளேர் செய்ய வாய்ப்பிருந்தும், டிக்ளேர் செய்யவில்லை என்று ரூட் தெரிவித்தார்.
