உலக கோப்பையை வென்ற உற்சாகத்தில், ஆஷஸ் தொடருக்காக தயாராகிவரும் இங்கிலாந்து அணி, அயர்லாந்துக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் யாரும் எதிர்பார்த்திராத அளவிற்கு சொதப்பியுள்ளது. 

இங்கிலாந்து - அயர்லாந்து இடையேயான ஒரேயொரு டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் ஜேசன் ராய் அறிமுகமானார். முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் வெறும் 85 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி அதிர்ச்சியளித்தது. பேர்ஸ்டோ, வோக்ஸ், மொயின் அலி ஆகிய மூவருமே டக் அவுட்டாகினர். முதல் இன்னிங்ஸில் படுமோசமாக ஆடி 24 ஓவர்களில் வெறும் 85 ரன்களுக்கு இங்கிலாந்து அணி ஆல் அவுட்டானது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய அயர்லாந்து அனி, 207 ரன்கள் அடித்தது. 122 ரன்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பர்ன்ஸ் 6 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரரான ஜாக் லீச்சும் மூன்றாம் வரிசையில் இறங்கிய ஜேசன் ராயும் அபாரமாக ஆடினர். முதல் இன்னிங்ஸில் அசந்த ராய், இரண்டாவது இன்னிங்ஸில் அடித்து நொறுக்கினார். அரைசதம் அடித்த ராய் 72 ரன்களில் ஆட்டமிழந்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு லீச் - ராய் ஜோடி 145 ரன்கள் சேர்த்தது. 

அவரைத்தொடர்ந்து லீச் 92 ரன்களில் ஆட்டமிழந்து 8 ரன்களில் சதத்தை தவறவிட்டார். அதன்பின்னர் மற்ற எந்த வீரருமே பெரிதாக ஆடவில்லை. ஜோ ரூட் மற்றும் சாம் கரன் ஆகிய இருவர் மட்டுமே 30 ரன்களை கடந்தனர். இரண்டாவது இன்னிங்ஸிலும் பேர்ஸ்டோ டக் அவுட்டானார். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 303 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து அணியிடம் இன்னும் ஒரு விக்கெட்டே உள்ள நிலையில், வெறும் 181 ரன்கள் தான் இங்கிலாந்து அணி முன்னிலை வகிக்கிறது.

இந்த போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வியை தவிர்க்க, அபாரமாக பந்துவீசி கடுமையாக போராடியாக வேண்டும்.