இங்கிலாந்து அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 5 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடிவருகிறது. முதலில் டி20 தொடர் நடந்துவருகிறது. 

முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணியும் அடுத்த இரண்டு போட்டிகளில் நியூசிலாந்து அணியும் வெற்றி பெற்றன. இந்நிலையில், நான்காவது டி20 போட்டி நேப்பியரில் நடந்துவருகிறது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணியின் டேவிட் மாலனும் கேப்டன் இயன் மோர்கனும் காட்டடி அடித்து நியூசிலாந்து அணியை தெறிக்கவிட்டனர். தொடக்க வீரர் பேர்ஸ்டோ 8 ரன்களில் ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரர் பாண்ட்டன் 20 பந்துகளில் 31 ரன்கள் அடித்தார். 

அதன்பின்னர் டேவிட் மாலனும் இயன் மோர்கனும் இணைந்து நியூசிலாந்து பவுலிங்கை அடித்து நொறுக்கினர். அதிரடியாக ஆடிய மோர்கன் 24 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை மோர்கன் படைத்தார். 

அவரைத்தொடர்ந்து அரைசதம் அடித்த டேவிட் மாலன், அரைசதத்திற்கு பின்னர், மோர்கனை ஓவர்டேக் செய்து சென்றார். இருவருமே தாறுமாறாக அடித்து ஆடினர். போடும் பந்துகளை எல்லாம் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசினர். 16 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 165 ரன்கள் அடித்திருந்தது. 17வது ஓவரில் டேவிட் மாலன், 3 சிக்ஸர்களையும் 2 பவுண்டரிகளையும் விளாசினார். 18வது ஓவரில் மாலன் 2 சிக்ஸர்களை விளாசினார். 19வது ஓவரில் இயன் மோர்கன் தனது வேலையை காட்ட ஆரம்பித்தார். அந்த ஓவரில் 3 சிக்ஸர்களையும் ஒரு பவுண்டரியையும் விளாசினார். 

டேவிட் மாலன் 48 பந்துகளில் சதமடித்து, டி20 கிரிக்கெட்டில் விரைவில் சதமடித்த இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை படைத்தார். கடைசி ஓவரில் இயன் மோர்கன் 91 ரன்களில் ஆட்டமிழந்தார். டேவிட் மாலன் மற்றும் இயன் மோர்கனின் அதிரடியால் இங்கிலாந்து அணி 20 ஓவரில் 241 ரன்களை குவித்தது. இதுதான் டி20 கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணியின் அதிகபட்ச ஸ்கோர். 

டேவிட் மாலன் 51 பந்துகளில் 103 ரன்களை குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மோர்கன் 41 பந்துகளில் 91 ரன்களை குவித்தார். 242 ரன்கள் என்ற கடின இலக்குடன் நியூசிலாந்து அணி ஆடிவருகிறது.