வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் அதிரடியாக ஆடிய இங்கிலாந்து அணி, 386 ரன்களை குவித்துள்ளது.

டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் மஷ்ரஃபே மோர்டஸா, இங்கிலாந்து அணியை பேட்டிங் செய்ய பணித்தார். தொடக்க வீரர்கள் ஜேசன் ராயும் பேர்ஸ்டோவும் சிறப்பாக தொடங்கினர். பேர்ஸ்டோ சற்று நிதானமாக ஆட, மறுமுனையில் ராய் அதிரடியாக ஆடினார். ராய் - பேர்ஸ்டோ ஆகிய இருவருமே வலது கை பேட்ஸ்மேன்கள் என்பதாலும் இருவரும் பெரிதாக ஸ்பின்னில் ஆடமாட்டார்கள் என்பதாலும் இடது கை ஆஃப் ஸ்பின்னரான ஷாகிப் அல் ஹாசனை வைத்து தொடங்கினார் வங்கதேச கேப்டன் மோர்டஸா. 

ஆனால் மோர்டஸாவின் திட்டத்தை வெற்றியடைய விடாமல் பார்த்துக்கொண்டனர் ராயும் பேர்ஸ்டோவும். இருவரும் ஷாகிப்பின் பந்தை நிதானமாக பார்த்து ஆடினர். மோர்டஸாவின் முதல் ஸ்பெல்லை அடித்து ஆடினர். அதிரடியாக ஆடிய ராய் அரைசதம் அடிக்க, அவரை தொடர்ந்து பேர்ஸ்டோவும் அரைசதம் அடித்தார். 

முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 19 ஓவரில் 128 ரன்களை குவித்தனர். முதல் விக்கெட்டையே போட முடியாமல் திணறிய வங்கதேச அணிக்கு பேர்ஸ்டோவை வீழ்த்தி பிரேக் கொடுத்தார் மோர்டஸா. இதையடுத்து ராயுடன் ஜோடி சேர்ந்த ரூட், அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடினார்.

தொடர்ந்து அதிரடியாக ஆடிய ஜேசன் ராய், 93 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடித்து சதம் விளாசினார். ஜேசன் ராயின் 9வது சதம் இது. சதத்திற்கு பிறகு ராய் அதிரடியை தொடர்ந்தார். பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசினார். ரூட் 21 ரன்களில் வெளியேற, தொடர்ந்து அதிரடியாக ஆடிய ராய், 150 ரன்களை கடந்தார். இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பு ராய்க்கு அருமையாக இருந்தது. ஆனால் 153 ரன்களில் ராய் வெளியேறினார். 35வது ஓவரில் ராய் வெளியேறினார்.

அதன்பின்னர் அவர் விட்டுச்சென்ற பணியை அந்த இடத்திலிருந்தே தொடர்ந்த பட்லர் அதிரடியாக ஆடி 44 பந்துகளில் 64 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து மோர்கன் 34 ரன்களில் வெளியேறினார். இதற்கிடையே ஸ்டோக்ஸ் வெறும் 6 ரன்கள் மட்டுமே அடித்து ஏமாற்றினார். ஆனால் வோக்ஸும் பிளங்கெட்டும் இணைந்து கடைசி 2 ஓவர்களில் பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்து மிரட்டினர். இவர்களின் கடைசி நேர அதிரடியால் இங்கிலாந்து அணி 386 ரன்களை குவித்தது. 

387 ரன்கள் என்ற கடின இலக்கை வங்கதேச அணி விரட்டிவருகிறது. இது மிகவும் கடின இலக்கு என்பதால் வங்கதேச அணி வெல்ல வாய்ப்பே இல்லை என்று உறுதியாகவே கூறலாம்.