Asianet News TamilAsianet News Tamil

பேர்ஸ்டோ சதம்; பில்லிங்ஸ் அரைசதம்; கிறிஸ் வோக்ஸின் கடைசி நேர காட்டடி..! ஆஸி.,க்கு கடின இலக்கை நிர்ணயித்த இங்கி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 302 ரன்களை குவித்து 303 என்ற கடினமான இலக்கை ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
 

england set tough target to australia in series decider last odi
Author
Manchester, First Published Sep 16, 2020, 9:49 PM IST

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி போட்டி மான்செஸ்டரில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடியது.

இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராயை இன்னிங்ஸின் முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாக்கி அனுப்பிய மிட்செல் ஸ்டார்க், அதற்கடுத்த பந்திலேயே ஜோ ரூட்டையும் வீழ்த்தினார். ராய் மற்றும் ரூட் ஆகிய இருவருமே கோல்டன் டக் அவுட்டானதால், ரன் கணக்கையே தொடங்காமல் 2 விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து அணி.

அதன்பின்னர் மற்றொரு தொடக்க வீரரான ஜானி பேர்ஸ்டோவுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் மோர்கனும் 23 ரன்களில் ஆடம் ஸாம்பாவின் சுழலில் வீழ்ந்தார். அவரைத்தொடர்ந்து ஜோஸ் பட்லரும் 8 ரன்களில் ஸாம்பாவின் சுழலில் அவுட்டாக, இங்கிலாந்து அணி 18.1 ஓவரில் 96 ரன்களுக்கே முக்கியமான 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடிய ஜானி பேர்ஸ்டோவுடன் சாம் பில்லிங்ஸ் ஜோடி சேர்ந்தார். பேர்ஸ்டோ அடித்து ஆடி சீரான வேகத்தில் ஸ்கோரை உயர்த்த, அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து பில்லிங்ஸ் மறுமுனையில் நன்றாக ஆட, பார்ட்னர்ஷிப் பில்ட் ஆனது. அயர்லாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான தொடரிலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரிலும் சொதப்பிய பேர்ஸ்டோ, நடப்பு தொடரில் இழந்த ஃபார்மை மீட்டு சிறப்பாக ஆடிவரும் நிலையில், இந்த போட்டியில் சதமடித்தார்.

இங்கிலாந்து அணி இக்கட்டான நிலையில் இருந்த நேரத்தில் ஆடப்பட்ட முக்கியமான இன்னிங்ஸ் இது. ஜானி பேர்ஸ்டோ சதமடிக்க, பில்லிங்ஸும் அரைசதம் அடித்தார். ஐந்தாவது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 19 ஓவரில் 114 ரன்களை சேர்த்தனர். பில்லிங்ஸ் 58 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 57 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

களத்தில் நங்கூரமிட்டு சதமடித்த பேர்ஸ்டோவுடன் கிறிஸ் வோக்ஸ் ஜோடி சேர்ந்த மாத்திரத்தில் பேர்ஸ்டோ 112 ரன்களில் ஆட்டமிழந்தார். 126 பந்தில் 12 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 112 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் டாம் கரன் 19 ரன்களும் அடில் ரஷீத் 11 ரன்களும் அடித்து தங்கள் பங்களிப்பை வழங்கினர்.

பேர்ஸ்டோ ஆட்டமிழந்ததும், அணியின் ஸ்கோரை உயர்த்த வேண்டிய பொறுப்பை தனது தோள்களில் சுமந்த கிறிஸ் வோக்ஸ், அதிரடியாக ஆடி 39 பந்தில் 6 பவுண்டரிகளுடன் 53 ரன்களை விளாசி, இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 300ஐ கடக்க உதவினார். பேர்ஸ்டோ, பில்லிங்ஸ், வோக்ஸின் சிறப்பான மற்றும் பொறுப்பான பேட்டிங்கால் இங்கிலாந்து அணி 50 ஓவரில் 302 ரன்களை குவித்து 303 என்ற கடின இலக்கை ஆஸ்திரேலியாவிற்கு நிர்ணயித்துள்ளது.

ஆஸ்திரேலிய அண்யின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சீரற்ற மற்றும் நிச்சயமற்ற தன்மையில் பேட்டிங் ஆடுவதால், அந்த அணிக்கு இந்த ஸ்கோர் கடினமாகத்தான் இருக்கும். அதுமட்டுமல்லாது, தொடரை தீர்மானிக்கும் போட்டி என்பதால் இங்கிலாந்து அணி வெற்றி பெறும் முனைப்பில் மிரட்டலாக பந்துவீசும். இந்த போட்டியில் ஆர்ச்சருடன் மார்க் உட்டும் இணைந்துள்ளதால், ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி கடினம்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios