இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான 2வது ஒருநாள் போட்டி மான்செஸ்டரில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடியது.

இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோ 7 பந்தில் ரன்னே அடிக்காமல் மிட்செல் ஸ்டார்க்கின் மிரட்டலான வேகத்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஜேசன் ராயுடன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார்.  நல்ல டச்சில் சிறப்பாக தொடங்கிய ஜேசன் ராய் 4 பவுண்டரிகளுடன் 22 பந்தில் 21 ரன்கள் அடித்து நன்றாக ஆடிக்கொண்டிருந்த நிலையில், 7வது ஓவரில் ரன் அவுட்டாகி வெளியேறினார்.

அதன்பின்னர் ஜோ ரூட்டுடன் கேப்டன் இயன் மோர்கன் ஜோடி சேர்ந்தார். ஃபார்மில் இல்லாததால், வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சொதப்பிய ரூட், ஒருநாள் போட்டிகளிலும் சொதப்புகிறார். முதல் போட்டியிலும் சரியாக ஆடவில்லை. இந்த போட்டியிலும் மிகவும் மந்தமாக பேட்டிங் ஆடினார். 73 பந்துகளை எதிர்கொண்ட போதிலும், கிடைத்த ஸ்டார்ட்டை பயன்படுத்தி பெரிய இன்னிங்ஸ் ஆடாமல், வெறும் 39 ரன்களில் ஆடம் ஸாம்பாவின் சுழலில் வீழ்ந்தார்.

அதன்பின்னர் பட்லர் 3 ரன்களிலும் கேப்டன் மோர்கன் 42 ரன்களிலும், கடந்த போட்டியில் சதமடித்த சாம் பில்லிங்ஸ் வெறும் 8 ரன்னிலும், சாம் கரன் ஒரு ரன்னிலும் ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி 38 ஓவரில் வெறும் 143 ரன்களுக்கே 7 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. நன்றாக ஆடிக்கொண்டிருந்த கிறிஸ் வோக்ஸும் 26 ரன்களில் ஆட்டமிழந்தார்.

40 ஓவரில் வெறும் 149 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களையாவது எட்டுமா என்ற நிலையில் இருந்த இங்கிலாந்து அணியை, கடைசி 10 ஓவரில் அடில் ரஷீத் மற்றும் டாம் கரன் ஆகியோரின் அதிரடியான பேட்டிங்கால் 82 ரன்களை குவித்ததால், 231 ரன்கள் என்ற ஸ்கோரை அடித்தது இங்கிலாந்து. 

டாம் கரன் 39 பந்தில் 37 ரன்களும் அடில் ரஷீத் 26 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 35 ரன்கள் அடித்தார். அடில் ரஷீத்தின் அதிரடியால் இங்கிலாந்து அணி 200 ரன்களை கடந்து 231 ரன்கள் என்ற ஸ்கோரையாவது எட்டியது. இல்லையெனில் 200 ரன்களைக்கூட அடித்திருக்காது. ஆஸ்திரேலிய அணி 232 ரன்கள் என்ற எளிய இலக்குடன் ஆடுகிறது.