ஆஷஸ் தொடரின் மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் படுமோசமாக பேட்டிங் ஆடி, ஆஷஸ் வரலாற்றில் மோசமான சாதனை ஒன்றை பதிவு செய்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி டிராவில் முடிந்தது. 

மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, ஆர்ச்சரின் வேகத்தை சமாளிக்க முடியாமல் 179 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணியின் சார்பில் ஆர்ச்சர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, கற்பனை கூட செய்துபார்க்க முடியாத அளவிற்கு மிக மோசமாக ஆடியது. அண்மையில் உலக கோப்பையை வென்ற சாம்பியன் போல ஆடவில்லை. ஸ்ட்ரீட் கிரிக்கெட்டே பரவாயில்லை எனும் ரேஞ்சுக்கு ஆடியது. 

அந்த அணியில் ஜோ டென்லி மட்டுமே இரட்டை இலக்கத்தில் ரன் எடுத்தார். அதுவும் வெறும் 12 தான். மற்ற அனைவருமே ஒற்றை இலக்கத்திலும் அதுகூட இல்லாமல் ஜீரோவிலும் வெளியேறினர். ராய், ரூட், பர்ன்ஸ், ஸ்டோக்ஸ், பட்லர், பேர்ஸ்டோ, வோக்ஸ் ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் அடுத்தடுத்து வெளியேறினர். வெறும் 28 ஓவரில் 67 ரன்களுக்கே ஆல் அவுட்டானது இங்கிலாந்து அணி. 

இதன்மூலம் 1948ம் ஆண்டுக்கு பிறகு இதுதான் ஆஷஸ் டெஸ்ட்டில் இங்கிலாந்து அணியின் குறைந்தபட்ச ஸ்கோர். 1948ம் ஆண்டு ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி, ஒரு போட்டியில் வெறும் 51 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதற்கு அடுத்த இரண்டாவது குறைந்தபட்ச ஸ்கோர் இதுதான்(67 ரன்கள்). 71 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாவது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளது இங்கிலாந்து.