உலக கோப்பை வரும் 30ம் தேதி தொடங்க உள்ள நிலையில், பயிற்சி போட்டிகள் நடந்துவருகின்றன. 

இந்த உலக கோப்பையை இந்தியா அல்லது இங்கிலாந்து அணிதான் வெல்லும் என்ற பரவலான கருத்து உள்ளது. ஆனால் ஆஸ்திரேலிய அணியும் மிகச்சிறப்பாக உள்ளது. ஸ்மித் மற்றும் வார்னரின் வருகைக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி எழுச்சி கண்டுள்ளது.

உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள வாய்ப்புள்ள அணிகளாக கருதப்படும் இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய 2 அணிகளுமே பயிற்சி போட்டியில் தோற்றன. இந்திய அணி நியூசிலாந்திடமும் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவிடமும் தோற்றன. 

இங்கிலாந்து அணியில் கேப்டன் இயன் மோர்கன் மற்றும் அடில் ரஷீத் ஆகிய இருவருமே காயம் காரணமாக நேற்றைய போட்டியில் ஆடவில்லை. ஜோ ரூட்டின் தாத்தா இறந்துவிட்டதால் அவரும் சென்றுவிட்டார். அதனால் நேற்றைய போட்டியில் இவர்கள் மூவருமே ஆடவில்லை. 

இங்கிலாந்து அணியில் ஏற்கனவே இயன் மோர்கன் மற்றும் அடில் ரஷீத் காயத்தில் இருக்கும் நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி போட்டியில் ஃபாஸ்ட் பவுலர்கள் மார்க் உட், ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் ஸ்பின் பவுலர் டாவ்சன் ஆகிய மூவருக்கும் காயம் ஏற்பட்டது. 

மார்க் உட் தனது 4வது ஓவரை வீசும்போது காலில் காயம் ஏற்பட்டதால் பாதியில் பந்துவீசாமல் பெவிலியனுக்கு திரும்பினார். அவருக்கு இடது கால் ஸ்லிப் ஆனதால் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது. அதேபோல அவருக்கு பதிலாக ஃபீல்டிங் செய்ய வந்த ஜோஃப்ரா ஆர்ச்சரும் காயமடைந்தார். ஆஸ்திரேலிய அணியின் இன்னிங்ஸில் 44வது ஓவரில் ஃபீல்டிங் செய்தபோது டாவ்சனுக்கும் காயம் ஏற்பட்டது. 

ஆனால் எதுவுமே பெரிய காயமாக தெரியவில்லை. எனினும் உலக கோப்பை நீண்ட தொடர் என்பதால் அனைத்து வீரர்களும் 100 சதவிகித உடற்தகுதியுடன் இருப்பது அவசியம். அதுவும் கடந்த சில ஆண்டுகளாக கஷ்டப்பட்டு இந்தளவிற்கு வலிமையான அணியாக உருவாக்கப்பட்டது இங்கிலாந்து அணி. எனவே வீரர்கள் உடற்தகுதியுடன் இருந்தால்தான் அவர்களது உலக கோப்பை கனவு நனவாக வாய்ப்பு இருக்கும். இல்லையென்றால் கஷ்டம்தான்.