இங்கிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடந்துவரும் போட்டியில் இங்கிலாந்து தொடக்க வீரர் ஜேசன் ராய் அதிரடியாக ஆடி சதம் விளாசினார்.

இரு அணிகளுமே ஏற்கனவே ஆடிய 2 போட்டிகளில் தலா ஒரு வெற்றியை பெற்று இரண்டாவது வெற்றியை பெறும் முனைப்பில் ஆடிவருகின்றன. டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் மஷ்ரஃபே மோர்டஸா, இங்கிலாந்து அணியை பேட்டிங் செய்ய பணித்தார். 

தொடக்க வீரர்கள் ஜேசன் ராயும் பேர்ஸ்டோவும் சிறப்பாக தொடங்கினர். பேர்ஸ்டோ சற்று நிதானமாக ஆட, மறுமுனையில் ராய் அதிரடியாக ஆடினார். ராய் - பேர்ஸ்டோ ஆகிய இருவருமே வலது கை பேட்ஸ்மேன்கள் என்பதாலும் இருவரும் பெரிதாக ஸ்பின்னில் ஆடமாட்டார்கள் என்பதாலும் இடது கை ஆஃப் ஸ்பின்னரான ஷாகிப் அல் ஹாசனை வைத்து தொடங்கினார் வங்கதேச கேப்டன் மோர்டஸா. 

ஆனால் மோர்டஸாவின் திட்டத்தை வெற்றியடைய விடாமல் பார்த்துக்கொண்டனர் ராயும் பேர்ஸ்டோவும். இருவரும் ஷாகிப்பின் பந்தை நிதானமாக பார்த்து ஆடினர். மோர்டஸாவின் முதல் ஸ்பெல்லை அடித்து ஆடினர். அதிரடியாக ஆடிய ராய் அரைசதம் அடிக்க, அவரை தொடர்ந்து பேர்ஸ்டோவும் அரைசதம் அடித்தார். 

முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 19 ஓவரில் 128 ரன்களை குவித்தனர். முதல் விக்கெட்டையே போட முடியாமல் திணறிய வங்கதேச அணிக்கு பேர்ஸ்டோவை வீழ்த்தி பிரேக் கொடுத்தார் மோர்டஸா. இதையடுத்து ராயுடன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார்.

தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஜேசன் ராய், 93 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடித்து சதம் விளாசினார். ஜேசன் ராயின் 9வது சதம் இது. ராய் நல்ல ஃபார்மில் சிறப்பாக ஆடிவருகிறார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஜோ ரூட் ஆடிவருகிறார். பாதி இன்னிங்ஸை கடந்துவிட்ட நிலையில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்துள்ளது. சதமடித்த ராய் களத்தில் இருப்பதுடன், மோர்கன், பட்லர் என அதிரடியான பேட்ஸ்மேன்கள் இருப்பதால், இங்கிலாந்து அணி இமாலய ஸ்கோரை அடிப்பது உறுதியாகிவிட்டது.