இலங்கைக்கு எதிரான 25ஆவது லீக் போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.
பெங்களூருவில் நடக்கும் உலகக் கோப்பை 25ஆவது லீக் போட்டியில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார். இங்கிலாந்து அணியில் அதிரடியாக 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ் மற்றும் லியாம் லிவிங்ஸ்டன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், இங்கிலாந்து அணி விளையாடிய 4 போட்டிகளில் ஒரு வெற்றி, 3 தோல்வியுடன் 8ஆவது இடத்தில் உள்ளது.
இங்கிலாந்து:
ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மலான், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), லியாம் லிவிங்ஸ்டன், மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி, அடில் ரஷீத், மார்க் வுட்
இலங்கை:
பதும் நிசாங்கா, குசால் பெரேரா, குசால் மெண்டிஸ் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), சதீர சமரவிக்ரமா, சரித் அசங்கா, தனன்ஜெயா டி சில்வா, ஏஞ்சலோ மேத்யூஸ், மஹீஷ் தீக்ஷனா, கசுன் ரஜீதா, லகிரு குமாரா, தில்ஷன் மதுஷங்கா
இதே போன்று இலங்கை விளையாடிய 4 போட்டிகளில் ஒரு வெற்றி, 3 தோல்வியுடன் 7ஆவது இடத்தில் உள்ளது. இலங்கை அணியில் அனுபவம் வாய்ந்த ஏஞ்சலோ மேத்யூஸ் அணியில் இடம் பெற்றுள்ளார். கடந்த 2006 ஆம் ஆண்டு நடந்த அண்டர் 19 உலகக் கோப்பையில் இலங்கை அணிக்கு மேத்யூஸ் கேப்டனாக இருந்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இங்கிலாந்தை வீழ்த்த முக்கிய காரணமாக இருந்தவர் மேத்யூஸ். இவர், 115 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 85 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இலங்கை 232 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய இங்கிலாந்து 212 ரன்கள் மட்டுமே எடுத்து 20 ரன்களில் தோல்வி அடைந்தது.
இதுவரையில் இரு அணிகளும் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 11 முறை மோதியுள்ளன. இதில், 6 முறை இங்கிலாந்தும், 5 முறை இலங்கை அணியும் வெற்றி பெற்றுள்ளன. இதில் அதிகபட்சமாக இங்கிலாந்து 333 ரன்களும், இலங்கை 312 ரன்களும் எடுத்துள்ளன. கடைசியாக நடந்த 4 உலகக் கோப்பை போட்டிகளில் இலங்கை அணி தான் வெற்றி பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கலப்பு 50 மீ ரைபிள் ப்ரோன் எஸ்எச் 1 போட்டியில் பாரா ஷூட்டர் சித்தார்த்தா பாபு தங்கம் வென்று சாதனை!
