இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. 

எனவே தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 469 ரன்களை குவித்தது. 

இரண்டாம் நாள் ஆட்டத்தின் இறுதியில் முதல் இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 2ம் நாள் ஆட்ட முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 32 ரன்கள் அடித்திருந்தது. முதல் விக்கெட் விழுந்ததும், மூன்றாம் வரிசையில் நைட் வாட்ச்மேனாக அல்ஸாரி ஜோசஃப் இறக்கப்பட்டிருந்தார். 

மூன்றாம் நாளான நேற்றைய ஆட்டம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்டது. முதல் இன்னிங்ஸில் நல்ல ஸ்கோர் செய்திருந்ததால், வெஸ்ட் இண்டீஸை முதல் இன்னிங்ஸில் சுருட்டும்பட்சத்தில், இந்த போட்டியில் இங்கிலாந்துக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது. ஆனால் மூன்றாம் நாள் ஆட்டம் முழுவதுமாக பாதிக்கப்பட்டதால் இங்கிலாந்துக்கு வெற்றி வாய்ப்பு குறைந்தது. 

நான்காம் நாளான இன்றைய ஆட்டத்தை கிரைக் பிராத்வெயிட்டும் அல்ஸாரி ஜோசஃபும் தொடர்ந்தனர். இன்றைய ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸின் விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்தினால் ஜெயிக்கலாம் என்ற சிறு நம்பிக்கை இங்கிலாந்துக்கு இருந்திருக்கும். ஆனால் இன்றைய ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பேட்டிங் ஆடுவதை பார்த்தால், அதற்கும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது. 

நைட் வாட்ச்மேன் அல்ஸாரி ஜோசஃபைக்கூட விரைவில் இங்கிலாந்து பவுலர்களால் வீழ்த்த முடியவில்லை. அல்ஸாரி ஜோசஃப் 52 பந்தில் 32 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அல்ஸாரி ஜோசஃபை டோமினிக் பெஸ் வீழ்த்தினார். அதன்பின்னர் கிரைக் பிராத்வெயிட்டுடன் ஷேய் ஹோப் ஜோடி சேர்ந்தார். கிரைக் பிராத்வெயிட் ஏற்கனவே களத்தில் நிலைத்துவிட்ட நிலையில், அவருடன் ஜோடி சேர்ந்த ஷேய் ஹோப்பும் இங்கிலாந்து பவுலர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி ஆடிவருகிறார். 

நான்காம் நாளான இன்றைய ஆட்டத்தின் உணவு இடைவேளை வரை வெஸ்ட் இண்டீஸ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் அடித்துள்ளது. முதல் செசனில் அல்ஸாரி ஜோசஃபின் ஒரு விக்கெட்டை மட்டுமே இங்கிலாந்து வீழ்த்தியது. வெஸ்ட் இண்டீஸ் ஆடும் விதத்தை பார்த்தால், இங்கிலாந்தால் விரைவில் சுருட்ட முடியாது என்பது தெரிகிறது. எனவே இங்கிலாந்துக்கு இந்த போட்டியில் வெல்லலாம் என்று இருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையையும் சிதைத்துவிட்டது வெஸ்ட் இண்டீஸ் அணி.