Asianet News TamilAsianet News Tamil

#ENGvsPAK 2வது டி20: பாகிஸ்தானை பழிதீர்த்த இங்கிலாந்து..! ஆட்டநாயகன் மொயின் அலி

பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
 

england beat pakistan in second t20 and level the series
Author
Leeds, First Published Jul 19, 2021, 3:06 PM IST

இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையேயான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்ற நிலையில், 2வது டி20 போட்டி நேற்று லீட்ஸில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

இந்த போட்டியில் இங்கிலாந்து கேப்டன் ஒயின் மோர்கன் ஓய்வு எடுத்துக்கொண்டதால், ஜோஸ் பட்லர் கேப்டன்சி பொறுப்பை ஏற்று செயல்பட்டார்.

இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராய் 10 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரரான ஜோஸ் பட்லர் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். 39 பந்தில் 59 ரன்கள் அடித்து அவர் ஆட்டமிழந்தார்.  டேவிட் மலான் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

ஆனால் அதிரடியாக ஆடிய மொயின் அலி 16 பந்தில் 36 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். பேர்ஸ்டோ 13 ரன்னிலும் லிவிங்ஸ்டோன் 38 ரன்னிலும் அவுட்டாகினர். அதன்பின்னர் டெய்லெண்டர்கள் அனைவருமே அடுத்தடுத்து சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க, 19.5 ஓவரில் 200 ரன்களுக்கு இங்கிலாந்து அணி ஆல் அவுட்டானது. பின்வரிசை வீரர்கள் ஓரளவிற்கு நன்றாக ஆடியிருந்தால் இன்னும் பெரிய ஸ்கோரை அடித்திருக்கும் இங்கிலாந்து அணி.

இதையடுத்து 201 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் முகமது ரிஸ்வான் 37 ரன்களும், பாபர் அசாம் 22 ரன்களும் அடித்தனர். அதன்பின்னர் மக்சூத், ஹஃபீஸ், ஃபகர் ஜமான், அசாம் கான் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். மிடில் ஆர்டர் பேட்டிங் சரிந்ததன் விளைவாக, 20 ஓவரில் 155 ரன்கள் மட்டுமே அடித்து 45 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோற்றது.

முதல் டி20 போட்டியில் தோற்ற இங்கிலாந்து அணி, 2வது போட்டியில் வென்று தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி நாளை நடக்கிறது.

இந்த போட்டியில் பேட்டிங் அதிரடியாக ஆடி 16 பந்தில் 36 ரன்கள் அடித்த மொயின் அலி, பவுலிங்கிலும் 2 விக்கெட் வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios