Asianet News TamilAsianet News Tamil

டேவிட் மலான் - ஜாக் க்ராவ்லி அரைசதம்..! பாகிஸ்தானை பந்தாடிய இங்கிலாந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி நிர்ணயித்த 142 ரன்கள் என்ற இலக்கை எளிதாக அடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இங்கிலாந்து அணி.
 

england beat pakistan by 9 wickets in first odi
Author
Cardiff, First Published Jul 8, 2021, 10:20 PM IST

இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையேயான முதல் ஒருநாள் போட்டி கார்டிஃபில் நடந்தது. இங்கிலாந்து அணியை சேர்ந்த 7 பேருக்கு கொரோனா உறுதியானதால் அணியை முழுவதுமாக மாற்றி, பென் ஸ்டோக்ஸ் தலைமையில் முழுக்க முழுக்க வேறு வீரர்களை கொண்ட இங்கிலாந்து அணி இறக்கப்பட்டது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பாகிஸ்தானை முதலில் பேட்டிங் செய்ய பணித்ததையடுத்து, பாகிஸ்தான் அணி பேட்டிங்  ஆடியது. பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் இமாம் உல் ஹக் டக் அவுட்டாக, அவரைத்தொடர்ந்து கேப்டன் பாபர் அசாமும் டக் அவுட்டானார்.  இருவருமே சாகிப் மஹ்முதுவின் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தனர்.

முகமது ரிஸ்வான்(13), சௌத் ஷகீல்(5), சொஹைப் மஹ்மூத்(19) ஆகியோர் சொற்ப ரன்களுக்கு சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க, ஒருமுனையில் நிலைத்து ஆடிய தொடக்க வீரர் ஃபகர் ஜமான் 47 ரன்னில் மேட் பார்கின்சனின் சுழலில் வீழ்ந்தார். ஃபஹீம் அஷ்ரஃபும் 5 ரன்னில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் ஹசன் அலி 6 ரன்னில் ஆட்டமிழந்தார். நன்றாக ஆடிய ஷதாப் கானும் 30 ரன்னில் ஆட்டமிழக்க, கடைசி விக்கெட்டாக ஷாஹீன் அஃப்ரிடி ஆட்டமிழக்க, 35.2 ஓவரில் வெறும் 141 ரன்களுக்கு ஆல் அவுட்டானது பாகிஸ்தான் அணி.

இங்கிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக சாகிப் மஹ்மூத் 4 விக்கெட்டுகளையும், ஓவர்டன் மற்றும் பார்கின்சன் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

142 ரன்கள் என்ற மிக எளிய இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் மலான் மற்றும் ஃபிலிப் சால்ட் ஆகிய இருவரும் இறங்கினர். ஃபிலிப் சால்ட் வெறும் 7 ரன்னில் ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் டேவிட் மலானும் ஜாக் க்ராவ்லியும் ஜோடி சேர்ந்து மிக அபாரமாக ஆடி அரைசதம் அடித்தனர். இருவருமே சிறப்பாக ஆடி அரைசதம் அடித்து, ஆட்டமிழக்காமல் அடித்து ஆடி 22வது ஓவரிலேயே இலக்கை அடித்து இங்கிலாந்தை வெற்றி பெறவைத்தனர். 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இங்கிலாந்து அணி. டேவிட் மலான் 68 ரன்களும், ஜாக் க்ராவ்லி 58 ரன்களும் அடித்தனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios