இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான 2வது டி20 போட்டி சவுத்தாம்ப்டனில் இன்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, முதலில் பேட்டிங் ஆடி 20 ஓவரில் 157 ரன்கள் அடித்தது.

ஆஸ்திரேலிய அணி முதல் ஓவரின் மூன்றாவது பந்திலேயே தொடக்க வீரர் டேவிட் வார்னரின் விக்கெட்டை இழந்தது. ஆர்ச்சர் வீசிய முதல் ஓவரிலேயே டக் அவுட்டாகி வெளியேறினார் வார்னர். அதன்பின்னர் தொடர்ச்சியாக சீரான இடைவெளியில் ஆஸ்திரேலிய அணி விக்கெட்டுகளை இழந்ததால் அந்த அணியால் பெரிய ஸ்கோரை அடிக்க முடியவில்லை.

வார்னர் முதல் ஓவரில் அவுட்டாக, இரண்டாவது ஓவரில் அலெக்ஸ் கேரி 2 ரன்னில் வெளியேற, ஸ்டீவ் ஸ்மித் 10 ரன்னில் ரன் அவுட்டானார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடிய கேப்டன் ஃபின்ச், 33 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 40 ரன்கள் அடித்து 12வது ஓவரில் அவுட்டாக, அதற்கடுத்த ஓவரிலேயே மார்கஸ் ஸ்டோய்னிஸும் ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் மேக்ஸ்வெல்(26), அஷ்டன் அகர்(23), கம்மின்ஸ்(13) என ஓரளவிற்கு பங்களிப்பு செய்ய, ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 157 ரன்கள் அடித்தது. தொடக்கம் முதல் கடைசி வரை, ஆஸ்திரேலிய அணியை இங்கிலாந்து பவுலர்கள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்து, அந்த அணியை பெரிய ஸ்கோர் அடிக்கவிடாமல் கட்டுப்படுத்தினர்.

இதையடுத்து 158 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் செம ஃபார்மில் இருப்பதால், இந்த போட்டியிலும் அருமையாக ஆடி அரைசதம் அடித்து கடைசி வரை களத்தில் இருந்து இங்கிலாந்து அணியை வெற்றி பெற செய்தார்.

தொடக்க வீரர் பேர்ஸ்டோ இன்னும் ஃபார்முக்கு திரும்பவில்லை. தொடர்ச்சியாக அவர் திணறிவருகிறார். கடந்த போட்டியில் சொதப்பிய நிலையில் இந்த போட்டியிலும் சொதப்பினார். மிட்செல் ஸ்டார்க் வீசிய 3வது ஓவரில் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். இதையடுத்து களத்திற்கு வந்த இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரராக உருவெடுத்துள்ள டேவிட் மாலன், தன் மீது அணியும் ரசிகர்களும் வைத்திருக்கும் நன்மதிப்பையும் நம்பிக்கையையும் வீணடிக்காமல் 42 ரன்கள் அடித்தார்.

பட்லரும் மாலனும் இணைந்து சிறப்பாக ஆடி 2வது விக்கெட்டுக்கு 87 ரன்களை சேர்த்தனர். மாலன் 42 ரன்னில் அவுட்டாக, அதன்பின்னர் களத்திற்கு வந்த டாம் பாண்ட்டன் 2 ரன்னிலும் கேப்டன் இயன் மோர்கன் 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் களத்தில் நிலைத்து அரைசதம் அடித்திருந்த பட்லர், கடைசிவரை களத்தில் நின்று தனது கடமையை செவ்வனே செய்தார். மொயின் அலி கடைசி நேரத்தில் களத்திற்கு வந்து 19வது ஓவரில் ஒரு பவுண்டரியும் ஒரு சிக்ஸரும் விளாச, பட்லர் சிக்ஸர் விளாசி இங்கிலாந்து அணியை வெற்றி பெற செய்தார்.

6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து அணி 2-0 என டி20 தொடரை வென்றது. எனவே கடைசி போட்டியில் இங்கிலாந்து அணிக்கு அழுத்தம் கிடையாது. ஜோஸ் பட்லர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 54 பந்தில் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 77 ரன்கள் அடித்தார்.