இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி சவுத்தாம்ப்டனில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச், இங்கிலாந்தை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.

இங்கிலாந்து அணி:

ஜானி பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), டேவிட் மாலன், டாம் பாண்ட்டன், இயன் மோர்கன்(கேப்டன்), மொயின் அலி, கிறிஸ் ஜோர்டான், டாம் கரன், ஜோஃப்ரா ஆர்ச்சர், மார்க் உட், அடில் ரஷீத்.

ஆஸ்திரேலிய அணி:

ஆரோன் ஃபின்ச்(கேப்டன்), டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், க்ளென் மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், அஷ்டன் அகர், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்ஸன், ஆடம் ஸாம்பா.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி, 20 ஓவரில் 162 ரன்கள் அடித்தது. இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக பட்லரும் பேர்ஸ்டோவும் இறங்கினர். பேர்ஸ்டோ இன்னும் ஃபார்முக்கு திரும்பவில்லை. தட்டுத்தடுமாறியே ஆரம்பித்த பேர்ஸ்டோ, பாட் கம்மின்ஸின் சர்ப்ரைஸ் பவுன்ஸரில் 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஆனால் பட்லர் தொடக்கம் முதலே அடித்து ஆடினார். இரண்டாவது ஓவரிலேயே சிக்ஸர்களை விளாசினார். கம்மின்ஸ், ஸ்டார்க் ஆகியோரின் பவுலிங்கையும் அடித்து ஆடிய பட்லர், 29 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 44 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் டேவிட் மாலன் மட்டும் ஒருமுனையில் நிலைத்து நின்று பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்து ஆட, மறுமுனையில் டாம் பாண்ட்டன், கேப்டன் இயன் மோர்கன், மொயின் அலி, டாம் கரன் ஆகியோர் மறுமுனையில் சீரான இடைவெளியில் வெறும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். ஆனால் டேவிட் மாலன் மட்டும் நிலைத்து நின்று ஆடி அரைசதம் அடித்து அணியை கரை சேர்த்தார்.

ஆனால் அவரும் கடைசிவரை களத்தில் இல்லாமல் 19வது ஓவரின் முதல் பந்தில் 66 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கடைசி ஓவர் வரை அவர் ஆடியிருந்தால், இங்கிலாந்து அணியின் ஸ்கோர் மேலும் உயர்ந்திருக்கும். மாலன் 43 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 66 ரன்கள் அடித்தார். இதையடுத்து இங்கிலாந்து அணி 20 ஓவரில் 162 ரன்கள் அடித்தது.

163 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் ஆரோன் ஃபின்ச் மற்றும் டேவிட் வார்னர் ஆகிய இருவரும் இணைந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 11 ஓவரில் 98 ரன்களை குவித்தனர். ஆரோன் ஃபின்ச் 32 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 46 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதன்பின்னர் ஸ்மித் 18 ரன்களிலும், மேக்ஸ்வெல் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிய மறுமுனையில் நிலைத்து ஆடி அரைசதம் அடித்து நம்பிக்கையளித்த வார்னரும் 58 ரன்களில் 16வது ஓவரின் 2வது பந்தில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் ஆட்டம் இங்கிலாந்து பக்கம் திரும்பியது.

அலெக்ஸ் கேரியும் ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, மார்கஸ் ஸ்டோய்னிஸ் களத்தில் நின்றதால் ஆஸ்திரேலிய அணிக்கு நம்பிக்கை இருந்தது. 19வது ஓவரின் கடைசி பந்தில் அஷ்டன் அகர் ரன் அவுட்டானார். 19 ஓவரில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் அடித்திருந்த நிலையில், கடைசி ஓவரில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது. 

அந்த ஓவரின் முதல் பந்தில் ரன் ஏதும் அடிக்காத ஸ்டோய்னிஸ், இரண்டாவது பந்தில் சிக்ஸர் அடித்தார். மூன்றாவது பந்திலும் ரன் அடிக்கவில்லை. இதையடுத்து கடைசி 3 பந்தில் 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 3 பந்திலும் ஸ்டோய்னிஸ் தலா 2 ரன்கள் அடிக்க, 160 ரன்கள் மட்டுமே அடித்த ஆஸ்திரேலிய அணி, 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

கடைசி ஓவரை இங்கிலாந்து ஃபாஸ்ட் பவுலர் டாம் கரன் அருமையாக வீசினார். ஐந்தாவது பந்தை செம யார்க்கராகவும், கடைசி பந்தை லோ ஃபுல் டாஸாகவும் வீசி ஸ்டோய்னிஸை பெரிய ஷாட் அடிக்கவிடாமல் கட்டுப்படுத்தி அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தார். இந்த போட்டியின் ஆட்டநாயகனாக டேவிட் மாலன் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என இங்கிலாந்து அணி முன்னிலை வகிக்கிறது.