கொரோனா அச்சுறுத்தலால் கடந்த 4 மாதங்களாக எந்தவிதமான கிரிக்கெட் போட்டிகளும் நடக்கவில்லை. 4 மாதங்களுக்கு பிறகு மீண்டும் கிரிக்கெ போட்டி தொடங்கியுள்ளது. இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் நடக்கிறது. 

இந்த போட்டியை காண பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை. சவுத்தாம்ப்டனில் இன்று, இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கியிருக்க வேண்டிய போட்டி, மழையால் தாமதமானது. முதல் செசன் முழுவதுமே மழையால் பாதிக்கப்பட்டது. மதிய உணவு இடைவேளைக்கு பிறகு போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. 

இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ரோரி பர்ன்ஸ் மற்றும் டோமினிக் சிப்ளி ஆகிய இருவரும் களமிறங்கினர். இரு அணி வீரர்களும் களத்திற்கு வந்ததும் மண்டியிட்டனர். வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் மண்டியிட்டு கைகளை உயர்த்தினர். கருப்பின மக்கள் மீதான இனவெறிக்கு எதிராகவும் கருப்பின மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் இரு அணி வீரர்களும் மண்டியிட்டனர். 

மழையால் தாமதமாக தொடங்கிய ஆட்டத்தில், இரண்டாவது ஓவரிலேயே இங்கிலாந்து தொடக்க வீரர் டோமினிக் சிப்ளி, கேப்ரியலின் பந்தில் டக் அவுட்டானார். அதன்பின்னர் ரோரி பர்ன்ஸுடன் ஜோ டென்லி ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார்.