ஆஷஸ் தொடரின் மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் படுமோசமாக பேட்டிங் ஆடியிருப்பது இங்கிலாந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி டிராவில் முடிந்தது. 

மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, ஆர்ச்சரின் வேகத்தை சமாளிக்க முடியாமல் 179 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணியின் சார்பில் ஆர்ச்சர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, கற்பனை கூட செய்துபார்க்க முடியாத அளவிற்கு மிக மோசமாக ஆடியது. அண்மையில் உலக கோப்பையை வென்ற சாம்பியன் போல ஆடவில்லை. ஸ்ட்ரீட் கிரிக்கெட்டே பரவாயில்லை எனும் ரேஞ்சுக்கு ஆடியது. 

அந்த அணியில் ஜோ டென்லி மட்டுமே இரட்டை இலக்கத்தில் ரன் எடுத்தார். அதுவும் வெறும் 12 தான். மற்ற அனைவருமே ஒற்றை இலக்கத்திலும் அதுகூட இல்லாமல் ஜீரோவிலும் வெளியேறினர். ராய், ரூட், பர்ன்ஸ், ஸ்டோக்ஸ், பட்லர், பேர்ஸ்டோ, வோக்ஸ் ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் அடுத்தடுத்து வெளியேறினர். வெறும் 28 ஓவரில் 67 ரன்களுக்கே ஆல் அவுட்டானது இங்கிலாந்து அணி. ஆஸ்திரேலிய அணியின் சார்பில் ஹேசில்வுட் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கம்மின்ஸ்  3 விக்கெட்டுகளையும் பேட்டின்சன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

ஒரு மாதத்திற்கு முன் உலக கோப்பையை வென்ற அணி, ஆஷஸ் டெஸ்ட்டில் 67 ரன்களுக்கு ஆல் அவுட்டான சம்பவம், இங்கிலாந்து ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவரும் ஆஸ்திரேலிய அணி வீரர்கள், சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். இவ்வாறு விக்கெட்டுகள் சரியும் வழக்கமாக ஸ்மித் செய்யும் வேலையை, அவருக்கு பதிலாக இறங்கியுள்ள லபுஷேன் சிறப்பாகவே செய்துவருகிறார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தபோதிலும் மறுமுனையில் லபுஷேன் அரைசதம் அடித்து ஆடிவருகிறார். வார்னரும் கேப்டன் டிம் பெய்னும் மட்டும் டக் அவுட்டாகினர். உஸ்மான் கவாஜா, ஹெட், வேட், மார்கஸ் ஹாரிஸ் ஆகியோர் ஓரளவிற்கு பங்களிப்பு செய்தனர். 

இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் அடித்துள்ளது. லபுஷேன் 53 ரன்களுடனும் பேட்டின்சன் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.