இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சவுத்தாம்ப்டனில் நடந்துவருகிறது. இந்த போட்டியை காண பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. நேற்று மழையால் ஆட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. நேற்று முழுவதுமே வெறும் 17.4 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன. 

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி, சீரான இடைவெளியில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்த நிலையில் 204 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. 

வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் 6 விக்கெட்டுகளையும் கேப்ரியல் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். டோமினிக் சிப்ளி, ரோரி பர்ன்ஸ், ஜோ டென்லி ஆகிய முதல் மூன்று விக்கெட்டுகளையும் கேப்ரியல் வீழ்த்தினார். அதன்பின்னர் கடைசி விக்கெட்டாக ஆண்டர்சனை கேப்ரியல் வீழ்த்தினார். 

இதற்கிடைப்பட்ட முக்கியமான 6 விக்கெட்டுகளையும் கேப்டன் ஜேசன் ஹோல்டர் வீழ்த்தினார். இங்கிலாந்து அணி சார்பில் சிறப்பாக ஆடிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ்(43 ரன்கள்) மற்றும் ஜோஸ் பட்லர்(35 ரன்கள்) ஆகிய இருவரையும் தனது அடுத்தடுத்த ஓவர்களில் வீழ்த்திய ஹோல்டர், க்ராவ்லி, ஓலி போப், மார்க் உட், ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகியோரையும் வீழ்த்தினார். ஹோல்டர் மொத்தமாக 42 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இங்கிலாந்து அணி சார்பில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் பட்லருக்கு அடுத்தபடியாக டோமினிக் பெஸ் 31 ரன்கள் அடித்தார். அவர் கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி 204 ரன்களுக்கே முதல் இன்னிங்ஸில் சுருண்டது.