நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 303 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து அணி. 

இங்கிலாந்து - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில், 2வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கி நடந்துவருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி, முதல் நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் அடித்திருந்த நிலையில், 2ம் நாளான இன்றைய ஆட்டத்தின் முதல் செசனிலேயே எஞ்சிய 3 விக்கெட்டுகளையும் இழந்து 303 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இங்கிலாந்து அணியில் ரோரி பர்ன்ஸ் மற்றும் டேனியல் லாரன்ஸ் ஆகிய இருவரைத்தவிர வேறு யாருமே சரியாக ஆடவில்லை. அரைசதம் அடித்த தொடக்க வீரர் ரோரி பர்ன்ஸ் 81 ரன்களில் ஆட்டமிழந்தார். ரூட், க்ராவ்லி, சிப்ளி ஆகியோர் சோபிக்கவில்லை. 

பின்வரிசையில் சிறப்பாக ஆடிய லாரன்ஸ் அரைசதம் அடித்தார். ஆனால் அவருக்கு மறுமுனையில் போதிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. அவருக்கு ஓரளவிற்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய மார்க் உட் 41 ரன்கள் அடித்தார். மார்க் உட் இங்கிலாந்தின் 8வது விக்கெட்டாக இன்றைய(2ம் நாள்) ஆட்டத்தின் முதல் செசனில் ஆட்டமிழந்ததையடுத்து, ஸ்டூவர்ட் பிராட்(0), ஆண்டர்சன்(4) ஆகிய இருவரையும் போல்ட் வீழ்த்த, 303 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்டானது. 

சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த லாரன்ஸ் 81 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கி ஆடிவருகிறது நியூசிலாந்து அணி.