இங்கிலாந்துக்கு எதிரான லீட்ஸ் டெஸ்டில், பந்து மாற்ற மறுப்புக்கு அதிருப்தி தெரிவித்ததால் ரிஷப் பண்ட் கண்டிக்கப்பட்டுள்ளார். ஐசிசி நடத்தை விதிமுறைகளை மீறியதற்காக அவரது ஒழுங்குமுறை பதிவில் ஒரு தகுதிக்குறைப்பு புள்ளி சேர்க்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிராக லீட்ஸில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில், இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸின் போது இந்திய விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் தனது கள நடத்தைக்காக கண்டிக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச போட்டிகளில் நடுவரின் முடிவுக்கு அதிருப்தி தெரிவிப்பது தொடர்பான ஐசிசியின் வீரர் மற்றும் பணியாளர்களுக்கான நடத்தை விதிகள் பிரிவு 2.8 ஐ ரிஷப் பந்த் மீறியதாகக் கண்டறியப்பட்டுள்ளது என ஐசிசி கூறியுள்ளது.

இதற்குப் மேலாக, ரிஷப் பந்தின் ஒழுங்குமுறைப் பதிவில் ஒரு தகுதிக்குறைப்பு புள்ளி சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த 24 மாதங்களில் இது அவரது முதல் தவறு என்று ஐசிசியின் அதிகாரப்பூர்வ இணையதளம் தெரிவித்துள்ளது.

Scroll to load tweet…

பந்தை மாற்ற மறுத்த அம்பயர் - ரிஷப் பந்த் அதிருப்தி:

இங்கிலாந்து இன்னிங்ஸின் 61வது ஓவரில், ஹாரி ப்ரூக் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் பேட்டிங் செய்து கொண்டிருந்தனர். அப்போது பந்தின் நிலை குறித்து நடுவருடன் பந்த் விவாதித்தார். டியூக்ஸ் பந்து 60 ஓவர்களுக்கு மேல் ஆகிவிட்டதால் மென்மையாகிவிடும் என்பதால் பந்த மாற்றும்படி அம்பயரிடம் கோரியிருக்கிறார் ரிஷப் பந்த்.

அம்பயர்கள் பந்தை சரிபார்த்துவிட்டு, அதனை மாற்ற மறுத்துவிட்டனர். இதனால் அதிருப்தி அடைந்த ரிஷப் பந்த் நடுவர்களின் முன்னால் பந்தை தரையில் வீசி எறிந்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

களத்தில் இருந்த அம்பயர்கள் கிறிஸ் கஃப்னி மற்றும் பால் ரைஃபில், மற்றும் மூன்றாவது அம்பயர் ஷர்புடௌலா இப்னே ஷாஹித் மற்றும் நான்காவது அம்பயர் மைக் பர்ன்ஸ் ஆகியோர் இந்த குற்றச்சாட்டுகளைக் கொண்டுவந்தனர். பந்த் தனது தவறை ஒப்புக்கொண்டு, ஐசிசி போட்டி நடுவர்கள் ரிச்சி ரிச்சர்ட்சன் முன்மொழிந்த தண்டனையை ஏற்றுக்கொண்டதால், எந்த ஒழுங்குமுறை விசாரணையும் நடத்தப்படவில்லை.

அபராதம் இன்றி தப்பிய ரிஷப் பந்த்:

ரிஷப் பந்த் சிக்கியிருப்பது லெவல் 1 நடத்தை விதிமீறல் ஆகும். லெவல் 1 விதிமீறல்களுக்கு குறைந்தபட்சம் ஒருமுறை கண்டனம் தெரிவிக்கப்படும். அல்லது வீரரின் போட்டிக்கான சம்பளத்தில் அதிகபட்சம் 50 சதவீதம் அபராதம் வசூலிக்கப்படும். அல்லது வீரரின் ஒழுங்குமுறை பதிவேட்டில் 1 அல்லது 2 தகுதிக்குறைப்பு புள்ளிகள் சேர்க்கப்படலாம்.

லீட்ஸ் டெஸ்ட் சமநிலையில் உள்ளது. ஐந்தாவது நாளில் இன்னும் 350 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இங்கிலாந்து அணி களமிறங்க உள்ளது. இந்திய அணி அதற்குள் இங்கிலாந்து அணியை ஆல்அவுட் செய்து தொடரை வெற்றியுடன் தொடங்க முயற்சி செய்யும். இதனால், கடைசி நாள் ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.