விறுவிறுப்பாக நடந்துவரும் உலக கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்க அணி தொடர் தோல்விகளை சந்தித்துள்ளது. இங்கிலாந்து, வங்கதேசம் மற்றும் இந்தியா ஆகிய அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தது. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியும் மழையால் கைவிடப்பட்டதால் புள்ளிகள் பிரித்து கொடுக்கப்பட்டது.

உலக கோப்பை வரலாற்றில் தென்னாப்பிரிக்க அணி, முதன்முறையாக தொடர்ச்சியாக மூன்று தோல்விகளை சந்தித்தது. உலக கோப்பை நெருங்கிக்கொண்டிருக்கிறது என்பது தெரிந்தும், கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் டிவில்லியர்ஸ் திடீரென ஓய்வு அறிவித்தார். டிவில்லியர்ஸின் திடீர் ஓய்வு அறிவிப்பு ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் தென்னாப்பிரிக்க அணிக்கே பேரதிர்ச்சியாக இருந்தது.

ஆனாலும் அவரது இடத்திற்கு மற்றொரு வீரரரை தயார் செய்து உலக கோப்பையில் ஆடவைத்தது தென்னாப்பிரிக்க அணி. உலக கோப்பையில் தென்னாப்பிரிக்க அணியின் பவுலிங் தான் பெரிய பலமாக பார்க்கப்பட்டது. ஆனால் ஸ்டெய்ன், இங்கிடி ஆகியோரின் காயம் மேலும் பின்னடைவை ஏற்படுத்தியது. ஸ்டெய்ன் காயம் காரணமாக உலக கோப்பை தொடரிலிருந்து முழுவதுமாக விலகிவிட்டார். இங்கிடி இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஆடவில்லை. அவர்கள் இருவரும் இல்லாதது அந்த அணிக்கு பெரிய பாதிப்பு.

அதன்பின்னர் இந்தியாவுக்கு எதிரான போட்டியிலும் தென்னாப்பிரிக்க அணி தோற்றது. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் வெற்றி முனைப்புடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மழை குறுக்கிட்டதால் ஆட்டம் கைவிடப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. 

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்க அணி தோற்றதும், டிவில்லியர்ஸ் குறித்த ஒரு தகவல் வெளியானது. டிவில்லியர்ஸ் உலக கோப்பையில் ஆடுவதற்கு விருப்பம் தெரிவித்தும்கூட, தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அவரை ஏற்க மறுத்துவிட்டதாக ஈஎஸ்பிஎன் கிரிக் இன்ஃபோ தெரிவித்திருந்தது. இந்த செய்தி காட்டுத்தீயாய் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் விளக்கமளித்தது. டிவில்லியர்ஸ் உலக கோப்பையில் ஆட வேண்டும் என்ற தனது விருப்பத்தை தெரிவித்தது உண்மை தான். ஓய்வு அறிவித்துவிட்டு ஓராண்டாக உள்நாட்டு மற்றும் சர்வதேச போட்டிகளில் ஆடாத டிவில்லியர்ஸை திடீரென உலக கோப்பை அணியில் எடுக்க முடியாது. கடந்த ஓரண்டாக டிவில்லியர்ஸின் இடத்தில் ஆடிய வீரரை ஒதுக்கிவிட்டு அவரை மீண்டும் அணியில் எடுப்பது சரியானது அல்ல. டிவில்லியர்ஸை மீண்டும் அணியில் சேர்க்காததால் அணி நிர்வாகத்துக்கு எந்த வருத்தமும் இல்லை என்று தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் சார்பில் விளக்கமளிக்கப்பட்டது. 

இந்நிலையில், டிவில்லியர்ஸ் விவகாரத்தில் தென்னாப்பிரிக்க கேப்டன் டுப்ளெசிஸ் மௌனம் கலைத்துள்ளார். இதுகுறித்து பேசிய டுப்ளெசிஸ், உலக கோப்பைக்கான அணி அறிவிக்கப்படுவதற்கு முந்தைய நாள் இரவு எனக்கு டிவில்லியர்ஸ் போன் செய்தார். அப்போது உலக கோப்பையில் ஆட அவர் விரும்புவதை வெளிப்படுத்தும் விதமாக பேசினார். ஆனால் காலம் கடந்துவிட்டது; அணி இன்னும் அறிவிக்கப்படவில்லையே தவிர, தேர்வு செய்தாகிவிட்டது. எனினும் பயிற்சியாளர் மற்றும் தேர்வுக்குழுவிடம் நான் பேசுகிறேன் என்றேன். மறுநாள் இதுகுறித்து பேசுகையில், 100% சான்ஸே இல்லை என்று தேர்வுக்குழு தெரிவித்துவிட்டது. இந்த சம்பவம் குறித்த தெளிவிற்காகவே இதை கூறுகிறேன். மற்றபடி இந்த விவகாரம் எங்கள் அணியில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. சொல்ல வேண்டுமென்றால், ஒரு அணியாக எங்களை ஒருங்கிணைத்துள்ளது என்று டுப்ளெசிஸ் தெரிவித்தார்.