இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 3வது டெஸ்ட் சிட்னியில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸி., அணி முதல் இன்னிங்ஸில் 338 ரன்கள் அடித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி வெறும் 244 ரன்கள் மட்டுமே அடித்தது.

94 ரன்கள் என்ற வலுவான முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸி., அணி, 3ம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் அடித்துள்ளது. இந்த போட்டியில் ஆஸி.,யின் கை ஓங்கியிருக்கிறது.

இந்த போட்டியின் 3ம் நாளான இன்றைய ஆட்டத்தில் இந்திய வீரர்கள் பும்ரா மற்றும் முகமது சிராஜை இன ரீதியாக சில ஆஸி., ரசிகர்கள் திட்டியுள்ளனர். கொரோனா அச்சுறுத்தலால் குறிப்பிட்ட அளவிலான ரசிகர்கள் மட்டும் ஸ்டேடியத்தில் போட்டியை காண அனுமதிக்கப்படுகின்றனர். அந்தவகையில், சிட்னியில் 10 ஆயிரம் ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டனர். 

போட்டியை காண வந்த பார்வையாளர்களில் சிலர் மது அருந்திவிட்டு, பும்ரா மற்றும் சிராஜை இனரீதியாக விமர்சித்துள்ளனர். ஆஸி., ரசிகர்கள் இனவெறியுடன் விமர்சிக்கும் சம்பவங்கள் இதற்கு முன்பும் பலமுறை அரங்கேறியிருக்கின்றன. இந்நிலையில், இதுதொடர்பாக கேப்டன் அஜிங்க்யா ரஹானே தலைமையில் பும்ரா, சிராஜ் ஆகியோர் கள நடுவர்களிடமும், போட்டி ரெஃப்ரியிடமும் புகார் அளித்துள்ளனர்.

வீடியோ பதிவை பார்த்து, அந்த சம்மந்தப்பட்ட நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.