கேகேஆரின் ஏப்ரல் 16 சாதனைகளின் பட்டியல் – சுனில் நரைன் ஹாட்ரிக் அண்ட் சதம், வெங்கடேஷ் ஐயர் சதம்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான 31ஆவது லீக் போட்டியில் சதம் அடித்த சுனில் நரைன், 2013 ஆம் ஆண்டு ஐஎபில் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட் எடுத்தது ஏப்ரல் 16ஆம் தேதி என்பது குறிப்பிடத்தக்கது.
2013, ஏப்ரல் 16:
ஏப்ரல் 16 ஆம் தேதிக்கும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் ஒரு முக்கியமான தொடர்பு உண்டு. கடந்த 2013 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் ஏப்ரல் 16 ஆம் தேதி நடந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான 20ஆவது லீக் போட்டியில் சுனில் நரைன் ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றினார்.
முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்தது. இதில் சுனில் நரைன் டேவிட் ஹஸ்ஸி, அசார் மஹமூத், குர்கீரத் சிங் மன் ஆகியோரது விக்கெட்டுகளை ஒரே ஓவரில் கைப்பற்றினார். 4 ஓவர்கள் வீசிய அவர் 33 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். பின்னர் விளையாடிய கேகேஆர் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் மட்டுமே எடுத்து 4 ரன்களில் தோல்வியை தழுவியது.
2023, ஏப்ரல் 16:
இதே போன்று கடந்த ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி நடந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான 22ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் எடுத்தது. இதில், வெங்கடேஷ் ஐயர் 51 பந்துகளில் 6 பவுண்டரி, 9 சிக்ஸர் உள்பட 104 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் 17.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2024, ஏப்ரல் 16:
இந்த நிலையில் தான் 2024, ஏப்ரல் 16 ஆம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் 31ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நரைனின் அதிரடியால 223 ரன்கள் குவித்தது.
இதில், நரைன் அதிரடியாக விளையாடி ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அவர், 56 பந்துகளில் 13 பவுண்டரி, 6 சிக்ஸர் உள்பட 109 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
2008, ஏப்ரல் 18:
கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் முதல் சீசனின் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் பிரான்டன் மெக்கல்லம் அதிரடியாக விளையாடி 73 பந்துகளில் 10 பவுண்டரி, 13 சிக்ஸர்கள் உள்பட 158 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தப் போட்டியில் கேகேஆர் 222/3 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய ஆர்சிபி 82 ரன்களுக்கு சுருண்டது.