இந்திய அணியின் இளம் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, அதிரடியான பேட்டிங், அருமையான பவுலிங், அபாரமான ஃபீல்டிங் என இந்திய அணியின் நட்சத்திர வீரராக ஜொலித்துவருகிறார். 

ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஹர்திக் பாண்டியா, 2016ம் ஆண்டு முதல் இந்திய அணியில் ஆடிவருகிறார். 11 டெஸ்ட், 45 ஒருநாள் மற்றும் 38 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார்.

கடந்த ஆண்டு உலக கோப்பைக்கு பின்னர் பெரிதாக ஆடவில்லை. அவருக்கு முதுகுப்பகுதியில் காயம் என்பதால், கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து சிகிச்சை பெற்று, கடந்த பிப்ரவரி மாதத்தில் உடற்தகுதி பெற்றார். ஆனாலும் அதன்பின்னர் அவர் இந்திய அணியில் ஆடவில்லை. 

வளர்ந்துவரும் இளம் வீரரான ஹர்திக் பாண்டியா, லாக்டவுனில் தனது காதலியான செர்பிய நடிகை நடாஷாவை திருமணம் செய்துகொண்டார். 

இளம் துடிப்பான வீரரான ஹர்திக் பாண்டியா, கிரிக்கெட்டில் கோடிக்கணக்கில் சம்பாதித்துவருகிறார். பிசிசிஐ-யின் வருடாந்திர ஊதிய ஒப்பந்தத்தில் பி பிரிவில் இடம்பெற்றிருக்கிறார் ஹர்திக் பாண்டியா. ஐபிஎல் மற்றும் விளம்பரங்கள் மூலமாகவும் சம்பாதித்துவருகிறார் ஹர்திக் பாண்டியா. 

சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து வந்த ஹர்திக் பாண்டியா, கிரிக்கெட்டின் மூலம் தனக்கு கிடைத்த வாழ்க்கையை ரசித்து, அனுபவித்து வாழ்கிறார். இந்நிலையில், அவரது கைக்கடிகாரத்தின் விலை அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது. 

பிரபலமான மற்றும் ஆடம்பர கடிகாரமான ரோலெக்ஸ்-ல் காஸ்மோகிராஃப் டேடோனா மாடல் வாட்ச்சை ஹர்திக் பாண்டியா வைத்துள்ளார். அந்த வாட்ச்சின் டயல் 18 கேரட் தங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. 243 வைரங்களால் ஆன டயலை கொண்ட வாட்ச் இது. ரோலெக்ஸின் விலைமதிப்பான வாட்ச்சில் இதுவும் ஒன்று. அந்த வாட்ச்சின் விலை ரூ.1.01 கோடி ஆகும்.