ஐபிஎல் 12வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நேற்றுடன் லீக் சுற்று முடிந்த நிலையில், தகுதிச்சுற்று நாளை தொடங்குகிறது. 

மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே, டெல்லி கேபிடள்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஆகிய நான்கு அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன. மும்பைக்கு எதிரான நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றால் பிளே ஆஃபிற்கு தகுதி பெற்றுவிடலாம் என்ற நிலையில், மும்பையை எதிர்கொண்டது கேகேஆர்.

ஆனால் பிளே ஆஃபிற்கு தகுதிபெறும் முனைப்பில் அந்த அணி ஆடவில்லை. பேட்டிங், பவுலிங் என அனைத்திலுமே படுமோசமாக செயல்பட்டது. ஒரு அணியாக அணிக்கு வெற்றிக்கு தேடிக்கொடுக்க வேண்டும் என்பதை கருத்தில்கொண்டு அந்த அணி வீரர்கள் ஆடவில்லை என்பது அவர்களது உடல்மொழியிலேயே தெரிந்தது. 

போட்டி முழுக்க மும்பை இந்தியன்ஸ் அணி ஆதிக்கம் செலுத்தியது. சுவாரஸ்யமே இல்லாமல் சென்றது போட்டி. முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணி வெறும் 133 ரன்கள் மட்டுமே எடுத்தது. 134 ரன்கள் என்ற இலக்கை எளிதாக எட்டி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் வென்றது. 

கேகேஆர் அணி ஒரேயொரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தியது. அது குயிண்டன் டி காக்கின் விக்கெட். மும்பை இந்தியன்ஸ் அணி பவர்பிளேயில் விக்கெட்டை இழக்கவில்லை. பவர்பிளே முடிந்து முதல் ஓவரின்(7வது ஓவர்) முதல் பந்திலேயே டி காக் ஆட்டமிழந்தார். பிரசித் கிருஷ்ணா வீசிய பவுன்ஸரை ஃபைன் லெக் திசையில் தூக்கி அடித்தார் டி காக். அந்த பந்தை விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் அதிவேகமாக ஓடிச்சென்று அபாரமாக பிடித்தார். செம ரன்னிங் கேட்ச் அது. இதுபோன்ற கேட்ச்சுகளை பிடிப்பது மிகவும் கடினம். ஆனால் தினேஷ் கார்த்திக் அந்த கேட்ச்சை அபாரமாக பிடித்தார். இந்த சீசனின் சிறந்த கேட்ச்சாக இது இருக்கும். அந்த வீடியோ இதோ..