உலக கோப்பை தொடரின் லீக் சுற்று இன்றுடன் முடிகிறது. இந்திய அணி ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறிவிட்ட நிலையில், இன்றைய போட்டியில் இலங்கை அணியுடன் ஆடிவருகிறது. 

இந்திய அணியில் நீண்டகாலமாக ஆடிவரும் தினேஷ் கார்த்திக், தனது முதல் உலக கோப்பை போட்டியை வங்கதேசத்துக்கு எதிராகத்தான் ஆடினார். 2007 உலக கோப்பை அணியில் இடம்பெற்றிருந்த தினேஷ் கார்த்திக்கிற்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை. இந்த உலக கோப்பையிலும் முதல் 7 போட்டிகளில் தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.

வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் கேதர் ஜாதவுக்கு பதில் களமிறங்கினார். ஆனால் அந்த போட்டியில் சோபிக்கவில்லை. ஆனாலும் இனிவரும் போட்டிகளில் கேதருக்கு பதில் தினேஷ் கார்த்திக் தான் இறக்கப்படுவார் என்பது உறுதியாகிவிட்டது.

 

தினேஷ் கார்த்திக்கை 7ம் வரிசையில் இறக்க அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்த தகவலை அவரே தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தினேஷ் கார்த்திக், நான் ஏழாம் வரிசையில் பேட்டிங் ஆட செல்லும்போது சூழலை கருத்தில்கொண்டு அதற்கேற்ப ஆட வேண்டும். முதலில் பேட்டிங் ஆடினால் அந்த நேரத்திற்கு தேவையான ரன்ரேட்டை உறுதிப்படுத்த வேண்டும் என்பதுதான் தனது ரோல் என தெரிவித்தார். 

இதன்மூலம் தினேஷ் கார்த்திக் சேஸிங்கின்போது 7ம் வரிசையில் இறங்க இருப்பது உறுதியாகியுள்ளது. இலங்கைக்கு எதிரான இன்றைய போட்டியில் கூட இந்திய அணி சேஸிங் தான் செய்யவுள்ளது. தினேஷ் கார்த்திக் எந்த வரிசையில் இறங்குகிறார் என்று பார்ப்போம்.