டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் தனக்கு இடம் இல்லை என்பது ஷ்ரேயாஸ் ஐயருக்கே தெரியும் என்று கூறியுள்ளார் தினேஷ் கார்த்திக்.
கடந்த 2021ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த டி20 உலக கோப்பையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி அரையிறுதிக்குக்கூட முன்னேறாமல், சூப்பர் 12 சுற்றுடனேயே வெளியேறியது. அந்த டி20 உலக கோப்பையுடன் விராட் கோலி கேப்டன்சியிலிருந்து விலகியதையடுத்து, ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலக கோப்பைக்காக இந்திய அணி தீவிரமாக தயாராகிவருகிறது.
ரோஹித்தின் கேப்டன்சியில் நியூசிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்து 3-0 என டி20 தொடரை வென்ற இந்திய அணி, இலங்கைக்கு எதிரான தொடரையும் 2-0 என வென்றுவிட்ட நிலையில், இலங்கையையும் ஒயிட்வாஷ் செய்வதற்கான வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.
இந்திய அணியின் மிடில் ஆர்டரில் ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் ஆகிய இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இருவருமே மிகச்சிறப்பாக ஆடிவருகின்றனர். சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் ஆகிய வீரர்களும் சிறப்பாக ஆடுகின்றனர். ஆனாலும் ரிஷப் பண்ட் தான் பிரதான விக்கெட் கீப்பராக ஆடுவார் என்பதால் அவர்களுக்கு, டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் இடம் கிடைக்காது.
அதேபோல சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவருமே மிகச்சிறப்பாக ஆடினாலும் சூர்யகுமார் யாதவ் தான் முதன்மை வீரராக ஆடுவார். டி20 உலக கோப்பையில் ரோஹித் - ராகுல் ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக இறங்குவார்கள். 3ம் வரிசையில் விராட் கோலி, 5ம் வரிசையில் ரிஷப் பண்ட் ஆகியோர் ஆடுவார்கள். 6 - 7ம் இடங்களில் ஜடேஜா-வெங்கடேஷ் ஐயர்/ஹர்திக் பாண்டியா ஆகியோர் ஆடுவார்கள். 4ம் வரிசையில் சூர்யகுமார் யாதவ் தான் பிரதான வீரராக எடுக்கப்படுகிறார். இலங்கைக்கு எதிரான தொடரில் கூட, விராட் கோலி ஆடாததால் ஷ்ரேயாஸ் ஐயர் மூன்றாம் வரிசையில் இறக்கப்பட்டார். இதன்மூலம் கோலிக்கு மாற்றுவீரராக ஷ்ரேயாஸ் பார்க்கப்படுகிறார். எனவே கோலி ஆடும்பட்சத்தில், அவருக்கு அடுத்த பேட்டிங் ஆர்டரில் சூர்யகுமார் யாதவ் தான் முதன்மை வீரராக இருக்கிறார்.
சூர்யகுமார் யாதவ் ஆடாத இலங்கைக்கு எதிரான தொடரில் 3ம் வரிசையில் ஆட கிடைத்த வாய்ப்பை ஷ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக பயன்படுத்திக்கொண்டார். முதலிரண்டு டி20 போட்டிகளிலுமே அரைசதம் அடித்தார். அதிலும், 2வது போட்டியில் அவர் ஆடிய விதம் அபாரமானது. முதல் ஓவரிலேயே ரோஹித் ஆட்டமிழந்ததால், 2வதுஓவரிலேயே நெருக்கடியான சூழலில் களத்திற்கு வந்த ஷ்ரேயாஸ் ஐயர், களத்திற்கு வந்தது முதலே அடித்து ஆடிய ஷ்ரேயாஸ் ஐயர் 44 பந்தில் 74 ரன்களை குவித்தார்.
அவர் என்னதான் சிறப்பாக ஆடினாலும் அவருக்கு டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் ஆரம்பத்தில் நேரடியாக இடம் கிடைக்காது என்று தினேஷ் கார்த்திக் கருத்து கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள தினேஷ் கார்த்திக், டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் ஆரம்பத்தில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு இடம் கிடைக்காது என்பது அவருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். ஆனால் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்து ஆஸ்திரேலியாவிற்கு செல்ல ஃபிளைட்டில் ஒரு காலை வைத்துவிட்டார் ஷ்ரேயாஸ் ஐயர். தொடர்ச்சியாக சிறப்பாக ஆடிவரும் ஒரு தரமான வீரரை ஒதுக்க முடியாது. அதுவும் மிகவும் முக்கியமான பேட்டிங் ஆர்டரான 3ம் வரிசையில் சிறப்பாக ஆடிவருகிறார். பக்குவமாக முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். ஆட்டத்தின் சூழலுக்கு ஏற்ப அபாரமாக ஆடுகிறார் என்று ஷ்ரேயாஸ் ஐயருக்கு புகழாரம் சூட்டியுள்ளார் தினேஷ் கார்த்திக்.
