தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கேப்டவுன் டெஸ்ட்டில் வெற்றி பெற்று இந்திய அணி முதல் முறையாக டெஸ்ட் தொடரை வெல்லும் என்று தினேஷ் கார்த்திக் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட்டில் இந்திய அணியும், 2வது டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்க அணியும் வெற்றி பெற்றன. 

செஞ்சூரியனில் முதல் முறையாக டெஸ்ட்டில் வெற்றி பெற்ற இந்திய அணி, ஜோஹன்னஸ்பர்க்கில் முதல் முறையாக தோல்வியை தழுவியது. இதையடுத்து 1-1 என தொடர் சமனடைந்துள்ளது.

வரும் 11ம் தேதி கேப்டவுனில் தொடங்கும் கடைசி டெஸ்ட் போட்டி தான் தொடரின் முடிவை தீர்மானிக்கும் முக்கியமான டெஸ்ட் போட்டி. அந்த டெஸ்ட் போட்டிக்காக இரு அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன.

இதுவரை இந்திய அணி கேப்டவுனில் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதில்லை. ஆனால் இம்முறை கேப்டவுனில் முதல் வெற்றியை பெற்று, தென்னாப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை இந்திய அணி வெல்லும் என தினேஷ் கார்த்திக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய தினேஷ் கார்த்திக், இந்திய அணி கேப்டவுனில் முதல் டெஸ்ட் வெற்றியை பெறும். கேப்டவுனில் ஆசிய அணி எதுவும் இதுவரை வெற்றி பெற்றதில்லை. கேப்டவுன் டெஸ்ட்டில் வெற்றி பெறும் முதல் ஆசிய அணி என்ற பெருமையுடன் இந்திய அணி தொடரை வெல்லும். கேப்டவுன் டெஸ்ட்டில் இந்திய அணி 400 ரன்களுக்கு மேல் குவித்தால் கண்டிப்பாக ஜெயித்துவிடும். 400 ரன்களுக்கு மேல் குவிப்பதற்கான பேட்டிங் வலிமை இந்திய அணியிடம் உள்ளது. ஆனால் தென்னாப்பிரிக்க அணியில் பவுமாவிற்கு பிறகு பேட்டிங் இல்லை. எனவே இந்திய அணி தான் டெஸ்ட் தொடரை வெல்லும் என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.