விஜய் ஹசாரே தொடரின் இன்றைய போட்டிகளில் ஒன்று தமிழ்நாடு மற்றும் பெங்கால் அணிகளுக்கு இடையே நடந்துவருகிறது. 

ஜெய்ப்பூரில் நடந்துவரும் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தமிழ்நாடு அணியின் தொடக்க வீரர்கள் அபினவ் முகுந்தும் ஜெகதீசனும் சோபிக்கவில்லை. ஹரி நிஷாந்த் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். பாபா அபரஜித் 34 ரன்களும் விஜய் சங்கர் 41 ரன்களும் அடித்தனர். ஆனால் அதிகமான பந்துகளை எதிர்கொண்டு இந்த ரன்களை அடித்தனர். அதனால் ரன்ரேட் கீழே கிடந்தது. 

அதன்பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் தினேஷ் கார்த்திக்கும் ஷாருக்கானும் இணைந்து அபாரமாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். 40 ஓவருக்கு தமிழ்நாடு அணி 5 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது. ஆனால் அதன்பின்னர் கடைசி 10 ஓவர்களில் தினேஷ் கார்த்திக்கும் ஷாருக்கானும் இணைந்து பெங்கால் பவுலிங்கை பொளந்துகட்டினர். பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். 

62 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 97 ரன்களை குவித்த தினேஷ் கார்த்திக், 3 ரன்களில் சதத்தை தவறவிட்டு 49வது ஓவரில் ஆட்டமிழந்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து அதிரடியாக ஆடிய ஷாருக்கான், 45 பந்துகளில் 69 ரன்களை குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 

தினேஷ் கார்த்திக் - ஷாருக்கான் ஜோடியின் அதிரடியான பேட்டிங்கால், 286 ரன்களை குவித்தது தமிழ்நாடு அணி. 40 ஓவரில் வெறும் 150 ரன்கள் மட்டுமே அடித்திருந்த தமிழ்நாடு அணி, கடைசி 10 ஓவரில் வெளுத்து வாங்கியது. 

287 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிவரும் பெங்கால் அணி, வெறும் 21 ரன்களுக்கே முதல் 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. எனவே தமிழ்நாடு அணியின் வெற்றி உறுதியாகிவிட்டது.