பவுலிங்கில் மாஸ் காட்டிய அஸ்வின் – திருச்சிக்கு கல்தா கொடுத்து சிம்பிள் வெற்றி பெற்ற திண்டுக்கல் டிராகன்ஸ்!

திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் 2024 தொடரின் 2ஆவது போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியானது 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

Dindigul Dragons beat Trichy Grand Cholas by 16 Runs Difference in 2nd Match of TNPL 2024 at Salem

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது போட்டி இன்று நடைபெற்றது. இதில், திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற திருச்சி சோழாஸ் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி திண்டுக்கல் டிராகன்ஸ் அணியானது முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் குவித்தது. இதில், அதிகபட்சமாக அந்த அணியின் தொடக்க வீரர் ஷிவம் சிங் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். அவர், 51 பந்துகளில் 6 பவுண்டரி, 5 சிக்ஸர் உள்பட 78 ரன்கள் எடுத்தார்.

விக்கெட் கீப்பர் பாபா இந்திரஜித் 33 ரன்கள் எடுத்துக் கொடுத்தார். பூபதி குமார் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பவுலிங்கைப் பொறுத்த வரையில் கே ஈஸ்வரன் 6 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். அதிசயராஜ் டேவிட்சன் மற்றும் சரவண குமார் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர். பின்னர் கடின இலக்கை துரத்திய திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியில் தொடக்க வீரர்களான வாசீம் அகமது 6 ரன்னிலும், அர்ஜூன் மூர்த்தி 18 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த தமிழ் திலீபன் 5 ரன்னில் வெளியேறினார். இவரைத் தொடர்ந்து வந்த ஷியாம் சுந்தர் 23 ரன்னிலும், ஜாஃபர் ஜமால் 13 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

சஞ்சய் யாதவ் மற்றும் ராஜ்குமார் கடைசியில் ஓரளவு ரன்கள் எடுத்துக் கொடுத்தனர். எனினும் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. ராஜ்குமார் 31 ரன்னில் வெளியேற சஞ்சய் யாதவ் 24 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசியில் வந்த சரவண குமார் 15 ரன்கள் எடுக்கவே திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியானது 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் மட்டுமே எடுத்து 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. திண்டுக்கல் அணியைப் பொறுத்த வரையில் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டும், சந்தீப் வாரியர் 2 விக்கெட்டும், வருண் சக்கரவர்த்தி, விபி தீரன், கிஷோர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios