Asianet News TamilAsianet News Tamil

அவங்க 2 பேரோட மன உறுதியை சிதைக்கிறீங்க; அவங்கள டெஸ்ட் அணியில் எடுத்திருக்கணும்! முன்னாள் வீரர் கடும் விமர்சனம்

இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற தகுதியான 2 வீரர்களை தேர்வு செய்யாததை மிகக்கடுமையாக விமர்சித்துள்ளார் முன்னாள் வீரரும் முன்னாள் தேர்வாளருமான திலீப் வெங்சர்க்கார்.
 

dilip vengsarkar slams selectors for not selecting ruturaj gaikwad and sarfaraz khan in test team
Author
Chennai, First Published Feb 20, 2022, 6:31 PM IST

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் இன்றுடன் முடிவடைகிறது. கொல்கத்தா ஈடன் கார்டனில் இன்று கடைசி டி20 போட்டி நடக்கிறது. இந்த தொடரை முடித்துவிட்டு இந்திய அணி அடுத்ததாக இலங்கைக்கு எதிரான தொடரில் ஆடவுள்ளது.

இலங்கை அணி இந்தியாவிற்கு வந்து 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. வரும் 24, 26, 27 ஆகிய 3 நாட்களும் 3 டி20 போட்டிகள் நடக்கின்றன. அதன்பின்னர் 2 டெஸ்ட் போட்டிகள் நடக்கின்றன.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுவிட்டது. விராட் கோலி டெஸ்ட் அணியின் கேப்டன்சியிலிருந்து விலகிய பின்னர் நடக்கும் முதல் டெஸ்ட் தொடர் இதுவென்பதால் யார் டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், வெள்ளைப்பந்து அணிகளின் கேப்டனான ரோஹித் சர்மாவே, டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். ஜஸ்ப்ரித் பும்ரா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளாக ஃபார்மில் இல்லாமல் தவித்துவந்த சீனியர் வீரர்களான ரஹானே மற்றும் புஜாரா ஆகிய இருவரும் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளனர். இளம் வீரர்கள் ஷுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர். உள்நாட்டு கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடி நல்ல ரெக்கார்டை வைத்திருக்கும் பிரியன்க் பன்சாலும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ரிஷப் பண்ட், கேஎஸ் பரத் ஆகிய இருவரும் விக்கெட் கீப்பர்களாக எடுக்கப்பட்டுள்ளனர். ரிதிமான் சஹாவிற்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோருடன் ஸ்பின்னர் ஜெயந்த் யாதவுக்கும் அணியில் இடம் கிடைத்துள்ளது. பும்ரா, ஷமி, சிராஜ், உமேஷ் யாதவ் ஆகியோர் ஃபாஸ்ட் பவுலர்களாக எடுக்கப்பட்டுள்ளனர்.

இலங்கைக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), மயன்க் அகர்வால், பிரியன்க் பன்சால், விராட் கோலி, ஷுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), கேஎஸ் பரத் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, ஜெயந்த் யாதவ், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா (துணை கேப்டன்), முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், சௌரப் குமார்.

இந்த அணி தேர்வை மிகக்கடுமையாக விமர்சித்துள்ளார் திலீப் வெங்சர்க்கார். உள்நாட்டு போட்டிகளில் அபாரமாக ஆடி ஏராளமான ரன்களை குவித்துவரும் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சர்ஃபராஸ் கான் ஆகிய இருவரையும் இந்திய டெஸ்ட் அணியில் எடுக்காததை விமர்சித்துள்ளார் வெங்சர்க்கார்.

இதுகுறித்து பேசிய திலீப் வெங்சர்க்கார், தேர்வாளர்கள் அணி தேர்வில் அறிவை பயன்படுத்தவில்லை. உள்நாட்டு கிரிக்கெட்டில் ரன்களை குவித்துள்ள ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சர்ஃபராஸ் அகமது ஆகிய இருவரும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களில் திறமையான 2 பேர், அணிக்காக பெரிதாக எதுவுமே செய்யவில்லை. ஆனால் அவர்களுக்கு எளிதாக இடம் கிடைக்கிறது. உள்நாட்டு கிரிக்கெட்டில் ஜொலித்துவரும் இருவருக்கு இடம் கிடைக்கவில்லை. ஒவ்வொரு வீரருமே இந்திய அணியில் அவர்களுக்கான இடத்தை கஷ்டப்பட்டுத்தான் பிடிக்க வேண்டும். யாருக்கும் எளிதாக இடம் கொடுக்கக்கூடாது. ருதுராஜ் மற்றும் சர்ஃபராஸ் ஆகிய இருவருமே டெஸ்ட் அணியில் இடம்பெறத் தகுதியானவர்கள். ஆனால் அவர்களை அணியில் தேர்வு செய்யாமல் அவர்களது மன உறுதியை சிதைத்துவருகின்றனர் தேர்வாளர்கள் என்று மிகக்கடுமையாக வெங்சர்க்கார் விமர்சித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios