அதிவேக ஸ்டம்பிங், சமயோசித ரன் அவுட்டுகள், அபாரமான கேட்ச்கள் என விக்கெட் கீப்பிங்கில் மிரட்டுபவர் தோனி. தோனியின் விக்கெட் கீப்பிங் திறமையை பலமுறை பார்த்திருந்தாலும், ஒவ்வொரு போட்டியிலும் ஏதாவது ஒரு சிறந்த சம்பவத்தை செய்து, மீண்டும் மீண்டும் கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்து கொண்டே இருக்கிறார். 

ராஞ்சியில் நேற்று நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 313 ரன்களை குவித்தது. 314 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி, 281 ரன்களை மட்டுமே எடுத்து 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங்கின் போது அபாரமான ஒரு ரன் அவுட்டை செய்தார் தோனி. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஜோடி நல்ல அடித்தளத்தை அமைத்து கொடுத்த பிறகு மூன்றாம் வரிசையில் இறங்கிய மேக்ஸ்வெல், பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி கொண்டிருந்தார். இந்திய அணியின் பவுலிங்கை அடித்து நொறுக்கினார் மேக்ஸ்வெல். அவரது விக்கெட்டை வீழ்த்தவில்லை என்றால் டெத் ஓவர்களில் இந்திய அணியின் நிலை மோசமாகிவிடும். அவர் ஆடிய வேகத்திற்கு 340-350 ரன்கள் வரை குவிக்கக்கூடிய சூழல் இருந்தது. 

அப்படியான சூழலில், ஜடேஜாவின் அபாரமான ஃபீல்டிங் மற்றும் தோனியின் சமயோசித விக்கெட் கீப்பிங்கால் ரன் அவுட்டாகி வெளியேறினார் மேக்ஸ்வெல். ஷான் மார்ஷ் அடித்த பந்தை அபாரமாக ஃபீல்டிங் செய்து தடுத்த ஜடேஜா, பந்தை அவசரப்பட்டு வீசவில்லை. பவுலிங் முனையை ஷான் மார்ஷ் நெருங்கிவிட, பந்தை தோனியிடம் வீசினார். மேக்ஸ்வெல் வேகமாக ஓடிவந்த நிலையில், பந்தை பிடித்து அடிக்க நேரமில்லாததால் அப்படியே லாவகமாக அந்த பந்தை ஸ்டம்பில் தட்டிவிட்டார் தோனி. மேக்ஸ்வெல் ரன் அவுட்டாகி வெளியேறினார். தோனியின் சமயோசித செயல்பாட்டால்தான் இந்த விக்கெட் சாத்தியமானது. இல்லையென்றால் வாய்ப்பே இல்லை.  அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.