உலக கோப்பையுடன் தோனி ஓய்வு பெற்றுவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தோனி இன்னும் அதுகுறித்து வாய்திறக்கவில்லை. உலக கோப்பை தோல்வியை அடுத்து, அடுத்த உலக கோப்பையை மனதில் வைத்து இந்திய அணியை உருவாக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் அணி நிர்வாகத்திற்கும் தேர்வுக்குழுவிற்கும் உள்ளது. 

தோனி ஓய்வு குறித்து எதுவும் பேசாத நிலையில், தோனியை அணியில் எடுப்பது குறித்து சிந்தக்கவில்லை. எனவே தோனி அவராகவே ஓய்வு பெறுவது நல்லது. இல்லையெனில் அவரை ஓரங்கட்ட வேண்டிவரும் என்கிற ரீதியில் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்திருந்தார். 

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ள நிலையில், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு ரிஷப் பண்ட் தான் முதன்மை விக்கெட் கீப்பர் என பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணிக்கு இனிமேல் ரிஷப் பண்ட் தான் முதன்மை விக்கெட் கீப்பர். தோனி 15 பேர் கொண்ட அணியில் இருப்பார். ஆனால் ஆடும் லெவனில் ரிஷப் பண்ட் தான் ஆடுவார் என்று தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஏற்கனவே எம்.எஸ்.கே.பிரசாத், தோனி அவராகவே ஓய்வு பெறுவது நல்லது என்று தெரிவித்திருந்த நிலையில், ரிஷப் பண்ட் தான் இனிமேல் இந்திய அணியின் முதன்மை விக்கெட் கீப்பர் என்று பிசிசிஐ அதிகாரியும் தெரிவித்திருப்பது தோனியை ஓரங்கட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டதை காட்டுகிறது. 

இந்திய அணிக்கு மூன்று விதமான சர்வதேச கோப்பைகளையும் வென்றுகொடுத்த முன்னாள் கேப்டன் தோனி, கிரிக்கெட்டில் ஒரு சகாப்தம். அந்த சகாப்தம் முடிவுக்கு வரவுள்ளது. தோனியின் முடிவை அவரே தேடிக்கொள்கிறாரா அல்லது முடிவு எழுதப்படுகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.