இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி திரில் வெற்றி பெற்றது.

நாக்பூரில் நடந்த இரண்டாவது போட்டியில் இந்திய பவுலர்கள் சிறப்பாக பந்துவீசினர். பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளமான நாக்பூரில் 251 ரன்கள் என்ற இலக்கைக்கூட எட்டவிடாமல் சுருட்டிவிட்டனர். பும்ரா, ஷமி, குல்தீப், கேதர் ஆகியோர் ரன்களை கட்டுப்படுத்தி விக்கெட்டுகளை எடுக்க, கடைசி ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியை திரில் வெற்றி பெற செய்தார் விஜய் சங்கர்.

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஜோடி முதல் விக்கெட்டுக்கே 83 ரன்களை சேர்த்து நல்ல அடித்தளத்தை அமைத்து கொடுத்தது. எனினும் அந்த ஜோடியை பிரித்தபிறகு, இந்திய பவுலர்கள் மிடில் ஓவர்களில் மிகவும் கட்டுக்கோப்பாக வீசி அந்த அணியின் ரன்ரேட்டை கட்டுப்படுத்தினர். 

வழக்கமாக ஒவ்வொரு போட்டியிலும் ஏதாவது ஒரு சிறப்பான சம்பவத்தை செய்து தலைப்பு செய்தியாகிவிடும் தோனி, இந்த போட்டியிலும் அதை செய்ய தவறவில்லை. விக்கெட் கீப்பிங்கில் தோனி சிறந்தவர் என்று சொல்லி தெரியவேண்டியதில்லை. அவரது சாதனைகளும் செயல்பாடுகளும் ஏற்கனவே நமக்கு பலமுறை பறைசாற்றியிருக்கின்றன. 

எனினும் நேற்றைய போட்டியிலும் ஒரு கடினமான கேட்ச்சை பிடித்து அசத்தினார். ஷான் மார்ஷுக்கு ஜடேஜா லெக் திசையில் வீசிய பந்து பேட்டில் பட்டு பின் செல்ல, அதை அபாரமாக கேட்ச் பிடித்தார் தோனி. பொதுவாக இதுபோன்ற லெக் திசையில் செல்லும் கேட்ச்சை பிடிப்பது சற்று கடினம். ஆனாலும் அதை பெரிய கஷ்டமெல்லாம் இல்லாமல் பிடித்தார் தோனி. அபாரமான அந்த கேட்ச்சின் வீடியோ இதோ..