உலக கோப்பை தொடரில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான போட்டி சவுத்தாம்ப்டனில் நடந்துவருகிறது. 

டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் டுபிளெசிஸ், பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக ஆம்லா மற்றும் டி காக் களமிறங்கினர். தொடக்கம் முதலே தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களை எளிதாக ரன் அடிக்கவிடாமல் புவனேஷும் பும்ராவும் கட்டுப்படுத்தினர். 

பும்ரா வீசிய 2வது ஓவரில் பேட்டால் பந்தை தொடவே பயந்தார் டி காக். அந்த ஓவரில் 2 ரன்கள் மட்டுமே அடிக்கப்பட்டது. மீண்டும் 4வது ஓவரை வீசிய பும்ரா, ஆம்லாவை வீழ்த்தினார். 6 ரன்களில் ஆம்லாவை வீழ்த்தி பெவிலியனுக்கு அனுப்பினார். அவுட்சைடு எட்ஜாகி சென்ற பந்தை ரோஹித் அருமையாக கேட்ச் பிடித்தார். அதன்பின்னர் தனது அடுத்த ஓவரிலேயே டி காக்கை 10 ரன்களில் வெளியேற்றினார் பும்ரா. 

முதல் 6 ஓவர்களில் வெறும் 24 ரன்களுக்கே தென்னாப்பிரிக்க அணி 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. கேப்டன் டுபிளெசிஸும் வாண்டெர் டசனும் இணைந்து ஆடிவருகின்றனர். டுபிளெசிஸின் விக்கெட்டை புவனேஷ்வர் குமார் போட்ட 5வது ஓவரிலேயே வீழ்த்தியிருக்கலாம். ஆனால் 2வது ஸ்லிப்பில் நின்ற ரோஹித் சர்மா அந்த கேட்ச்சை கோட்டைவிட்டார். அதனால் 5வது ஓவரிலேயே பெவிலியன் திரும்பியிருக்க வேண்டிய டுபிளெசிஸ் தொடர்ந்து ஆடிவருகிறார். 

ஆனால் தோனி செய்த மிஸ்டேக், பெரிய விளைவை ஏற்படுத்தவில்லை. 2வது ஓவரின் நான்காவது பந்தை ஃபைன் லெக் திசையில் அடித்துவிட்டு டி காக் இரண்டு ரன்கள் ஓடினார். அந்த பந்தை பிடித்து விக்கெட் கீப்பரிடம் எறிந்தார் கேதர் ஜாதவ். ஸ்டம்புக்கு அருகில் தோனி இல்லாவிட்டாலும், தோனி அந்த பந்தை ஸ்டம்பில் அடித்திருந்தால் டி காக் அப்போதே அவுட்டாகியிருப்பார். ஆனால் தோனி சரியாக ஸ்டம்பில் அடிக்கவில்லை. அதனால் தப்பிய டி காக், அந்த வாய்ப்பை பயன்படுத்தி பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. அடுத்த சில ஓவர்களிலேயே 10 ரன்களில் நடையை கட்டினார். அதனால் தோனி விட்ட ரன் அவுட் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் ரோஹித் கேட்ச் விட்டதால் டுபிளெசிஸ் தொடர்ந்து ஆடிவருகிறார்.