இந்திய கிரிக்கெட்டின் ஆகச்சிறந்த வீரர்கள் மற்றும் கேப்டன்களில் ஒருவர் தோனி. இந்திய அணிக்கு ஒருநாள் உலக கோப்பை, டி20 உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய மூன்றுவிதமான சர்வதேச கோப்பைகளையும் வென்று கொடுத்த வெற்றிகரமான கேப்டன் தோனி. 

தோனி 15 ஆண்டுகள் இந்திய அணிக்காக ஆடிவிட்டார். கேப்டனாகவும் ஒரு வீரராகவும் மிகச்சிறந்த பங்களிப்பை செய்துள்ளார். உலக கோப்பையுடன் தோனி ஓய்வு பெற்றுவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தோனி ஓய்வும் பெறவில்லை. அதுகுறித்த தெளிவான தகவலை தெரிவிக்கவும் இல்லை. தொடர்ந்து மௌனம் காத்துவருகிறார். 

தோனி இனிமேல் இந்திய அணியில் சேர்க்கப்பட வாய்ப்பில்லை. அவருக்கு ஃபேர்வெல் போட்டி ஒன்றை ஏற்பாடு செய்து அதில் ஆடவைத்து அனுப்பிவிடுவார்கள். ஆனால் அதுகுறித்த உறுதியான தகவலும் இன்னும் வரவில்லை. இவ்வாறு தோனியின் ஓய்வு குறித்த விவாதம் நடந்துவரும் நிலையில், தோனி அடுத்தகட்ட செயல்பாடுகளுக்கு தயாராகிவிட்டார். 

அதாவது தனது சொந்த ஊரான ராஞ்சியில் கிரிக்கெட் அகாடமி ஒன்றை தொடங்கும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கியுள்ளாராம் தோனி. இளம் வீரர்களை வளர்த்தெடுக்கும் விதமாக கிரிக்கெட் அகாடமி ஒன்றை தொடங்க திட்டமிட்டுள்ளார். அதற்காக அவரது சிறுவயது நண்பரான ஆர்க்கா ஸ்போர்ட்ஸ் கம்பெனி உரிமையாளர் மற்றும் தோனியின் மேனேஜர் ஆகிய இருவரும் இடம் பார்த்து வருகின்றனர். சரியான இடம் அமைந்துவிட்டால், இரண்டு ஆண்டுகளில் தோனியின் கிரிக்கெட் அகாடமி தொடங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.