வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதலில் டி20 தொடர் நடந்துவருகிறது. முதலிரண்டு டி20 போட்டிகள் நடந்துள்ள நிலையில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளன. 

மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பை வான்கடேவில் நாளை நடக்கவுள்ளது. டி20 தொடர் முடிந்ததும் டிசம்பர் 15ம் தேதி ஒருநாள் தொடர் தொடங்குகிறது. 15, 18, 22 ஆகிய தேதிகளில் முறையே சென்னை, விசாகப்பட்டினம் மற்றும் கட்டாக் ஆகிய இடங்களில் ஒருநாள் போட்டிகள் நடக்கின்றன.

டி20 மற்றும் ஒருநாள் ஆகிய இரண்டு தொடர்களுக்குமான அணியில் இடம்பெற்றிருந்த தொடக்க வீரர் ஷிகர் தவான், சையத் முஷ்டாக் அலி தொடரில் ஆடியபோது, காயமடைந்தார். அந்த காயம் குணமடையாததால், டி20 அணியிலிருந்து அவர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டார். 

இந்நிலையில், தவானின் காயம் முழுமையாக குணமடைய இன்னும் கொஞ்ச நாள் ஆகும் என்பதால், அவர் ஒருநாள் அணியிலிருந்தும் விலகுவதற்கான வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தவானுக்கு மாற்றுவீரர் விரைவில் அறிவிக்கப்படுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

ஏற்கனவே தவான் ஃபார்மில் இல்லாமல் கடந்த 2-3 தொடர்களாக சொதப்பிவரும் நிலையில், டி20யில் ரோஹித்துடன் ராகுலையும் ஒருநாள் கிரிக்கெட்டில் மயன்க் அகர்வாலையும் தொடக்க வீரராக இறக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. இப்படியான சூழலில் தான் தவான் காயம் காரணமாக டி20 அணியிலிருந்து விலக நேரிட்டது. இப்போது ஒருநாள் அணியிலிருந்தும் விலகும் அபாயம் உள்ளது. 

தவானுக்கு பதிலாக எந்த வீரர் அணியில் இணைவார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள ஒருநாள் அணி:

விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா(துணை கேப்டன்), ஷிகர் தவான், கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, சாஹல், குல்தீப் யாதவ், தீபக் சாஹர், முகமது ஷமி, புவனேஷ்வர் குமார்.