உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. 

உலக கோப்பையில் இந்திய அணி சிறப்பாக ஆடிவருகிறது. இதுவரை இந்திய அணி ஆடிய 4 போட்டிகளில் 3ல் வெற்றி பெற்றது. நியூசிலாந்துக்கு எதிரான போட்டி மழை காரணமாக டாஸ் கூட போடாமல் கைவிடப்பட்டது. எனவே மொத்தம் 7 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் நான்காமிடத்தில் உள்ளது. 

இந்திய அணியின் பெரிய பலமே டாப் ஆர்டர் தான். ரோஹித், தவான், கோலி ஆகிய மூவரில் ஒருவர் நிலைத்து நின்று பெரிய இன்னிங்ஸ் ஆடினாலே இந்திய அணியின் வெற்றி உறுதியாகிவிடும். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா சதமடித்தார். அதன்பின்னர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த போட்டியில் தவான் சிறப்பாக ஆடி சதமடித்தார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அந்த போட்டியில் பாட் கம்மின்ஸின் பவுன்ஸரில் தவானுக்கு கை கட்டைவிரலில் அடிபட்டது. இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் தவான் ஃபீல்டிங் செய்யவில்லை. சிறியளவிலான எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. எனவே ஒரு வார காலம் தவானுக்கு ஓய்வளிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. 

அதனால் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கூட தவான் ஆடவில்லை. தவானுக்கு பதிலாக ராகுல் தான் தொடக்க வீரராக களமிறங்கினார். ஒருவேளை தவானுக்கு காயம் சரியாகவில்லை என்றால், அவருக்கு பதிலாக அணியில் சேர்வதற்காக ரிஷப் பண்ட் கடந்த வாரமே இங்கிலாந்து சென்றுவிட்டார். 

இந்நிலையில், தவானின் காயம் குணமடைய இன்னும் ஒரு மாத காலம் ஆகும் என்பதால் அவர் உலக கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார். இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி போன்ற ஐசிசி தொடர்களில் அபாரமாக ஆடக்கூடியவரான தவான், சதத்திற்கு பிறகு உலக கோப்பையிலிருந்து விலகியிருப்பது இந்திய அணிக்கு இழப்புதான். ஆனால் அவருக்கு பதிலாக களமிறங்கும் ராகுலும் சிறந்த வீரர் என்பதால் இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக இருக்காது.