இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி போர்ட் ஆஃப் ஸ்பெய்னில் நடந்துவருகிறது.

முதல் போட்டி மழையால் ரத்தானதால், தொடரை வெல்ல வேண்டுமானால் எஞ்சிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இரு அணிகளும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் களமிறங்கியுள்ளன. 

இந்த போட்டியில் இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. முதல் போட்டியில் களமிறங்கிய அதே வீரர்களுடன் தான் இந்திய அணி களமிறங்கியுள்ளது. 

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித்தும் தவானும் களமிறங்கினர். முதல் ஓவரை கோட்ரெல் வீசினார். இரண்டாவது பந்தில் 2 ரன்கள் அடித்த தவான், மூன்றாவது பந்தில் ஆட்டமிழந்தார்.

கோட்ரெல் வீசிய மூன்றாவது பந்து தவானின்  கால்காப்பில் பட, வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அம்பயரிடம் எல்பிடபிள்யூ அப்பீல் செய்தனர். ஆனால் அம்பயர் அவுட் கொடுக்கவில்லை. இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ரிவியூ எடுத்தனர். ரிவியூவில் அவுட் உறுதியானதால் தவான் 2 ஆட்டமிழந்து வெளியேறினார். முதல் ஓவரின் மூன்றாவது பந்திலேயே இந்திய அணி முதல் விக்கெட்டை இழந்துவிட்டது. 

இதையடுத்து தொடக்க வீரரும் துணை கேப்டனுமான ரோஹித் சர்மாவுடன் கேப்டன் கோலி ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார்.